ஆர்சிபி தோல்வி எதிரொலி: டேனியல் கிறிஸ்டியனை வறுத்தெடுத்த ரசிகர்கள்

ஆர்சிபி தோல்வி எதிரொலி: டேனியல் கிறிஸ்டியனை வறுத்தெடுத்த ரசிகர்கள்
ஆர்சிபி தோல்வி எதிரொலி: டேனியல் கிறிஸ்டியனை வறுத்தெடுத்த ரசிகர்கள்
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து பெங்களூரு அணி வீரர் டேனியல் கிறிஸ்டியனை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 39 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் பெங்களூரு அணி வேகப்பந்து வீச்சாளர் டேனியல் கிறிஸ்டியனை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இப்போட்டியில் கொல்கத்தா அணிக்கு குறைந்த ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டதால், தொடக்கம் முதலே ரன்கள் அதிகம் செல்லாமல் பெங்களூரு அணி கட்டுப்படுத்தி வந்தது. அப்போது டேனியல் கிறிஸ்டியன் வீசிய 12-வது ஓவரில் 3 சிக்சர் உட்பட 22 ரன்கள் சென்றது. இதுதான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கடைசி ஓவரில் 7 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு கொல்கத்தா அணி வந்தது. அப்போது டேனியல் கிறிஸ்டியனை கடைசி ஓவர் வீச விராட் கோலி அழைத்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஓவரின் முதல் பந்திலேயே கொல்கத்தா வீரர் ஷாகிப் அல் ஹசன் பவுண்டரி விளாசினார். இதனை அடுத்து 3 சிங்கிள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
இதனால் கிறிஸ்டியன் மீது ஆர்சிபி ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். சில ரசிகர்கள் டேனியல் கிறிஸ்டியனின் மனைவி இன்ஸ்டாகிராம் கணிக்கிற்கு சென்று சிலர் வரம்புமீறி விமர்சித்திருக்கிறார்கள். இதனால் அதிருப்தியடைந்த கிறிஸ்டியனும் மேக்ஸ்வெல்லும் வரம்புமீறி கருத்துப் பதிவிட்ட ரசிகர்களை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். மேக்ஸ்வெல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆர்சிபிக்கு இது சிறந்த சீசனாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக நாங்கள் இருக்க வேண்டும் என்று நினைத்த இடத்திலிருந்து பின் தங்கிவிட்டோம். இந்த தோல்விக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் சில அருவருப்பான கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. நாம் அனைவரும் மனிதர்கள். ஒவ்வொரு நாளும் முடிந்த பங்களிப்பைச் செய்து வருகிறோம். மோசமான செய்திகளை பரப்புவதற்குப் பதிலாக ஒழுக்கமான நல்ல மனிதர்களாக இருங்கள். வீரர்களுக்கு அன்பை பகிர்ந்துகொண்ட உண்மையான ரசிகர்களுக்கு நன்றிகள்'' எனத் தெரிவித்தார்.
டேனியல் கிறிஸ்டியன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், “எனது மனைவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்று பாருங்கள். இன்று எங்களுக்கு மோசமான போட்டிதான். தயவுசெய்து அவளை தொந்தரவு செய்யாதீர்கள்” என வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக 9 போட்டிகளில் விளையாடியுள்ள டேனியல் கிறிஸ்டியன், 14 ரன்களும் 4 விக்கெட்டும் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com