அதிரடி காட்டிய வாட்சனை அலேக்காக தூக்கிய மிஷ்ரா..!
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் வாட்சன் அதிரடி காட்டினார்.
30-வது ஐபிஎல் லீக் ஆட்டம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியுள்ளது. டாஸ் ஜெயித்த டெல்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன் மற்றும் டூ பிளஸ்சிஸ் களமிறங்கினர்.
தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டிய வாட்சன், டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாப்புறம் தெறிக்க விட்டார். டெல்லி அணியினர் வாட்சன் விக்கெட்டை வீழ்த்த எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும், அத்தனையையும் தவிடு பொடியாக்கி சிக்சர், பவுண்டரிகளாக பறக்கவிட்டு கொண்டிருந்தார் வாட்சன். மறுமுனையில் டூ பிளஸ்சிஸ் நின்று நிதானமான ஆடினார். 10.5 ஆவது ஓவரில் விஜய் சங்கர் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டூ பிளஸ்சிஸ். இந்த இணை முதல் விக்கெட்டிற்கு 102 ரன்கள் குவித்திருந்தது. அதன்பின் சுரேஷ் ரெய்னா களம் கண்டார். முதல் பந்தில் ஒரு ரன் எடுத்த ரெய்னா அடுத்த பந்திலே மேக்ஸ்வெல்லிடம் போல்ட் ஆனார். ஆனால் வாட்சனை மட்டும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வெளுத்து வாங்கிய வாட்சனால் சென்னை அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். சிக்சர், பவுண்டரி என விளாசிக் கொண்டிருந்த வாட்சன் 78 ரன்கள் குவித்திருந்த நிலையில் லெக் ஸ்பின்னரான அமித் மிஷ்ராவை பவுலிங் செய்ய டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முடிவு செய்தார். அப்போது ஷேன் வாட்சன், அமித் மிஷ்ராவின் ஸ்பின் பந்தை "லாங் ஆஃப்" திசையில் தூக்கி அடித்தார், ஆனால் துரதிஷ்டவசமாக பிளங்கட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால் ‘ அய்யோ போச்சே’ என்று சென்னை அணியின் ரசிகர்கள் சற்று கலக்கம் அடைந்தனர். 40 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சருடன் மொத்தமாக 78 ரன்கள் குவித்திருந்தார் வாட்சன். வாட்சனை வீழ்த்தியிருந்தாலும் ராயுடு மற்றும் தோனி நின்று தூள் கிளப்பி வருகின்றனர்.