ஆமை பேட்டிங்கால் தோற்ற சென்னை : மேட்ச் ரிவ்யூ

ஆமை பேட்டிங்கால் தோற்ற சென்னை : மேட்ச் ரிவ்யூ
ஆமை பேட்டிங்கால் தோற்ற சென்னை : மேட்ச் ரிவ்யூ

ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற தோனி இந்த முறையும் பவுலிங்கையே தேர்வு செய்தார். ஆனால், தோனி எதிர்பார்த்தபடி ஆட்டத்தின் போக்கை கொண்டுபோகக்கூடாது என்பதில் டெல்லி அணியினர் கவனத்துடன் இருந்தனர். அதற்கு ஏற்ப தொடக்க ஆட்டக்காரர்களான தவான் மாற்றும் பிருத்வி ஷா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சீரான வேகத்தில் ரன்களை குவித்த பிருத்வி ஷா அரை சதம் கடந்தார். மறுபுறம் ரன்களை சேர்த்த தவான் 35 ரன்கள் எடுத்த நிலையில், பியூஸ் சாவ்லா வீசிய சுழலில் எல்பிடபிள்யு அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து மீண்டும் பியூஸ் சாவ்லா பந்தில் பிருத்வி ஷா ஸ்டம்பிங் ஆனார். பிரித்வி ஷா மீது பட்டு விலகி சென்ற பந்தை சட்டென எடுத்த தோனி உடனே அதை விக்கெட்டாக மாற்றியிருந்தார்.

இதன்பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லியை கட்டுப்படுத்தும் என நினைத்தபோது ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்து சென்னையின் வியூகத்தை உடைத்தனர். 22 பந்துகளை சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர் தனது பங்கிற்கு 26 ரன்களை அடித்தார். அதிரடியாக ஆட முயன்ற ரிஷப் பண்ட் 25 பந்துகளில் 37 ரன்களை விளாசி இறுதிவரை களத்தில் இருந்தார். கடைசி நேரத்தில் களமிறங்கிய ஸ்டொயினிஸ் ஒரு பவுண்டரி உட்பட 3 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தார்.

ஏதோ ஒரு வீரரை நம்பி இல்லாமல் அனைத்து வீரர்களும் ரன்களை குவித்தது டெல்லி அணிக்கு பலமாக அமைந்தது. இந்த முறையும் சென்னை அணியின் பவுலர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பந்துவீசவில்லை. 4 ஓவர்களை வீசிய தீபக் சாஹர் விக்கெட் எதுவுமின்றி 38 ரன்களையும், 4 ஓவர்கள் வீசி 28 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தாலும் விக்கெட் எதையும் எடுக்காமல் ஹஸ்ல்வுட்டும் சொதப்பியிருந்தனர்.

இந்த முறை 2 விக்கெட்டுகளை வீழ்த்திய சாவ்லா சற்று பரவாயில்லை என்று கூறலாம். ஆல்ரவுண்டர் சாம் குரான் ஒருபுறம் விக்கெட்டை வீழ்த்தியதுடன், 4 ஓவர்களுக்கு 27 ரன்கள் மட்டுமே கொடுத்து தனது பங்கை சிறப்பாக செய்திருந்தார். ஆனால் மறுபுறம் மற்றொரு ஆல்ரவுண்டரான ஜடேஜா விக்கெட் எதுவும் எடுக்கமால் 44 ரன்களை வாரிக்கொடுத்து கோட்டை விட்டார். இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்களை குவிக்க முடிந்தது.
கடைசி நேரத்தில் தோனி பாய்ந்து பிடித்த கேட்ச் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

176 என்ற சவாலான இலக்கை எதிர்த்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் வாட்ஸன் வழக்கம்போல சொதப்பினர். 15 பந்துகளை சந்தித்த முரளி விஜய் 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இன்னும் முரளி விஜயை ஏன் அணியில் வைத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு ஏற்றவாறு அவரது ஆட்டம் இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வாட்சன் இந்தப் போட்டியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு வழக்கம்போல சொதப்பினார். 16 பந்துகளை சந்தித்த அவர் 14 ரன்களை மட்டுமே எடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய டு பிளசிஸ் எப்போதும்போல தனது பாணியில் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விக்கெட்டை இழக்காமல், அதேசமயம் ரன்களையும் அவர் சேர்த்தார். இதற்கிடையே வந்த ருதுராஜ் கெய்க்வாக் 10 பந்துகளில் 5 ரன்களை மட்டுமே எடுத்துவிட்டு ரன் அவுட் ஆனார். அதன்பின்னர் டுபிளசிஸுடன் ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ், வேக வேகமாக பந்துகளை அடித்தார். ஆனால் ரன்கள் மட்டும் பெரிதாக ஏறவில்லை. 21 பந்துகளில் 26 ரன்களை மட்டுமே அவரால் எடுக்கமுடிந்தது.

அதன்பின்னர் அடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் களத்தில் இறங்கிய தோனி சிக்ஸருக்காக பேட்டை சுழற்றினார். ஆனால் பந்துகள் சரியாக மாட்டவில்லை. ஏனென்றால் டெல்லி அணியின் பவுலர்கள் கதகச்சிதமாக பந்துகளை வீசினர். இதையடுத்து ரபாடாவின் வேகத்தில் டுபிளசிஸ் வீழ்ந்தார். சென்னையின் வெற்றியும் கை நழுவியது. அதன்பின்னர் வந்த ஜடேஜா தோனியுடன் சேர்ந்து தனக்கு தெரிந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார். தோல்வி உறுதியானதை உணர்ந்த தோனி கடைசி ஓவரில் பேட்டை சுற்றிவிட்டு விக்கெட்டை பறிகொடுத்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் ஜடேஜாவும் நடையைக் கட்டினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 131 ரன்களை மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுக்க முடிந்தது. சிறப்பாக ஆடிய டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினர்.

டெல்லி அணியில் ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜ், அக்சர் படேல் ஆகியோர் விக்கெட்டுகளை எடுத்ததுடன், சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி ரன்களையும் கட்டுப்படுத்தினர். சில மிஸ் ஃபீல்டிங், ஹெட்மயர் தவறவிட்ட கேட்ச்கள் என ஒருசில குறைகள் மட்டுமே டெல்லி அணியில் தென்பட்டன. இருப்பினும் எளிமையான வெற்றியை அவர்கள் பதிவு செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஊதித்தள்ளினர். அனுபவம் நிறைந்த சென்னை அணி ஆமை போன்ற ஆட்டத்தால் வெற்றியை தவறவிட்டது. பந்துகளை அறுத்து விளையாடிய முரளி விஜய், வாட்ஸன், கெய்க்வாக் மற்றும் கேதர் ஜாதவின் பேட்டிங் சென்னைக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் 2வது தோல்வியை வெற்றிகரமாக பதிவு செய்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com