ராஜஸ்தானை இன்று சந்திக்கிறது சிஎஸ்கே! சென்னை அணியில் மாற்றம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று சந்திக்கிறது.
இரண்டு வருடத் தடைக்குப் பிறகு களமிறங்கி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு வரவேற்பு பலமாக இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பையை எதிர்கொண்ட சிஎஸ்கே, அதன் சொந்த மண்ணில் வென்று வெற்றிக்கணக்கைத் தொடங்கியது. அடுத்தப் போட்டியில் கொல்கத்தாவை, சேப்பாக்கத்தில் புரட்டியெடுத்தது. ஆனால், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், வெறும் 4 ரன்னில் வெற்றியை நழுவவிட்டது. இந்தப் போட்டியில் கடைசி பந்துவரை தோனி போராடி மிரட்டினார். அவர் 44 பந்துகளில் 79 ரன் எடுத்தார்.
இந்தப் போட்டியில் ஜடேஜாவுக்கு முன்பாக பிராவோவை களமிறங்கியிருக்கலாம் என்று விமர்சனம் எழுந்தது. பிராவோ முன்பே வந்திருந்தால் சில சிக்சர்களை பறக்கவிட்டு கடைசி கட்ட டென்ஷனை குறைத்திருப்பார்கள் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று ராஜஸ்தான் அணியை புதிய ’ஹோம் கிரவுண்டான’ புனேவில் சந்திக்கிறது சிஎஸ்கே. இந்தப் போட்டிக்காக சென்னையில் இருந்து சிறப்பு ’விசில்போடு எக்ஸ்பிரஸ்’ ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் சென்னை ரசிகர்கள் புனேவுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் சிஎஸ்கே வீரர்கள் நேற்று வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். காயம் காரணமாக பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் இருந்த சுரேஷ் ரெய்னா, வலைப் பயிற்சியில் கலந்துகொண்டார். இதனால் அவர் இன்று களமிறங்குவது உறுதியாகிவிட்டது. பஞ்சாப்புக்கு எதிராக நடந்த போட்டியின்போது முதுகு பகுதியில் காயமடைந்த தோனி, கடைசிவரை வலியோடு விளையாடிக்கொண்டிருந்தார். இதன் காரணமாக நேற்றுமுன் தினம் அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. இதனால் அவர் இன்றைய போட்டியில் ஆடுவாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், அவர் நேற்று பங்கேற்றார்.
இன்றையை போட்டியில் சிஎஸ்கே-வில் சில மாற்றங்கள் இருக்கும் என்று தெரிகிறது. காயம் காரணமாக அணியில் இடம் பிடிக்காமல் இருந்த டுபிளிசிஸ் உடல்தகுதி பெற்றுள்ளார். அவர் ஆடும் லெவனுக்குள் வந்தால் ஷேன் வாட்சன், முரளி விஜய் ஆகியோரில் ஒருவர் விலக்கப்படலாம். ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ராயுடுவும் டுபிளிஸும் ஆடுவார்கள். அதே நேரம் கேதர் ஜாதவுக்குப் பதிலாக அணியில் இணைந்துள்ள இங்கிலாந்து ஆல் ரவுண்டர் டேவிட் வில்லே இன்று மிடில் ஆர்டரில் இறங்கு வார் என்றும் ஸ்பின்னர் கரண் சர்மா இறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் அணியில் கேப்டன் ரஹானே, சஞ்சு சாம்சன் நல்ல பார்மில் இருக்கிறார்கள். ரூ. 12.5 கோடிக்கு எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், ரூ.11.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஜெய்தேவ் உனட்கட் ஆகியோரின் செயல்பாடு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலியாவின் ஷார்ட் ஆகியோர் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் இன்றைய போட்டியில் பிக்பாஷ் போட்டியில் கலக்கிய ஜெஃப்ரா ஆர்ச்சர் களம் இறங்குவார் எனத் தெரிகிறது.
கடந்த போட்டியில் தோல்வியை தழுவி இருப்பதால் இந்தப் போட்டியில் வெல்ல வேண்டும் என்று இரண்டு அணிகளும் முனைப்பில் உள்ளது. இதனால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.