''வாய்கிழிய பேசுவியே கொல்கத்தா, இப்ப சொல்லு நாங்க கெத்தா'' - ட்விட்டரில் தெறிக்கவிடும் சென்னை அணி!
ஐபிஎல் தொடரின் 23வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நேற்று நடைபெற்றது. 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத ரஸல் 44 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். சென்னை அணியில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் மற்றும் இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
109 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணி 17.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 5வது வெற்றியை பதிவு செய்தது. நேற்றைய போட்டியில் எதிர்ப்பார்ப்பு அதிகரிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்று நாட்களுக்கு முன்பு போட்ட ட்வீட்டும் காரணமாக அமைந்தது.
மூனு நாள்ல மீட் பண்ணுவோம் என சவால் விடுப்பது போன்ற ட்வீட்டை தட்டிவிட்டது கொல்கத்தா. இந்த ட்வீட்டுக்கு பலரும் கலாய்த்து பதிலளித்து வந்தனர். வடிவேலு, கவுண்டமணி என போட்டோ கமெண்டுகள் ரிப்ளையில் பறந்தன. இந்நிலையில் நேற்றைய வெற்றிக்கு பின் கொல்கத்தா அணியின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள சென்னை அணி ''நைஸ் மீட்டிங் யூ'' என நக்கலாக பதிலளித்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க சென்னை அணி வீரர்கள் ஹர்பஜனும், இம்ரான் தாஹீரும் தங்கள் பங்குக்கு பஞ்ச் டயலாக்கை பதிவிட்டுள்ளனர். வெற்றி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் ''அப்பத்தா அம்மத்தா கொல்கத்தா சென்னை கிட்ட வாங்காத ஊமக்குத்தா. மூணு நாள்ல சொன்ன மீட்டு இப்ப முச்சந்தில உக்காந்து முக்காடு போடவெச்சுருச்சா. தல வேட்டு .அங்காளி பங்காளி வா இனி ஆட்டம் தான் எப்போதும் அடி அடி. சிஎஸ்கே மேட்சுனாலே வாய்கிழிய பேசுவியே கொல்கத்தா, இப்ப சொல்லு நாங்க கெத்தா'' என்று பதிவிட்டுள்ளார்.
இம்ரான் தாஹீர், தீப்பெட்டி ரெண்டு பக்கம் உரசுனா தான் தீப்பிடிக்கும். சென்னைய எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும். பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல. எடுடா வண்டிய போடுடா விசில என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.