சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், துபாயில் வரும் 19ஆம் தேதி ஆரம்பமாக உள்ள ஐ.பி.எல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் விலகுவதாக சி.எஸ்.கே அணியிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் துபாயில் ஆரம்பமாக உள்ள ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதில் சென்னை அணிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், சென்னை அணியின் வீரர்கள் இருவர் உட்பட மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால் சென்னை அணி தனிமைபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரெய்னாவும் இந்தியா திரும்பிய நிலையில் ஹர்பஜன் சிங் தொடரில் இருந்து விலகுவதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று சென்னை வெளியிட வாய்ப்பு உள்ளது. வரும் 19ஆம் தேதி மும்பை அணியோடு சென்னை விளையாட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.