சிஎஸ்கே அணிக்கு சென்னையில் இருந்து பரவியதா கொரோனா ?
ஐபிஎல் தொடரில் பங்கேற்க துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சென்னையில் இருந்து கொரோனா பரவியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் எதையும் முதல் அணியாக தொடங்குவது சிஎஸ்கேவின் வழக்கம். கொரோனா அச்சத்தால் நடப்பு சீசனுக்காக எந்த அணியும் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ளாத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சேப்பாக்கத்தில் 5 நாட்கள் பயிற்சியை மேற்கொண்டனர்.
பயிற்சியை முடித்துக்கொண்டு மிகுந்த உற்சாகத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பறந்த சிஎஸ்கேவுக்கு, சிக்கலாக வந்தது கொடிய கொரோனா. இதர அணிகள் எல்லாம் அமீரகத்தில் ஆயத்தப் பணிகளில் இறங்கிவிட்டன. ஆனால் சென்னை அணியில் இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஹோட்டல் அறைகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர் சிஎஸ்கே வீரர்கள்.
துபாய் புறப்படும் முன்பு, கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த சென்னையில் சிஎஸ்கே அணியினர் பயிற்சி செய்தது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சென்னையில் இருந்து சென்ற ஒரு சில நாளில் கொரோனா பாதிப்பு உறுதியானதால், இங்கு ஒன்றுகூடி பயிற்சி மேற்கொண்டபோது தொற்று ஏற்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது செப்டம்பர் 6ம் தேதி வரை சென்னை அணி பயிற்சியை தொடங்குவது சாத்தியமற்றதாக உள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து திட்டமிட்டபடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐ.பி.எல் 2020ன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுவதற்கான வாய்ப்பு தென்படுகிறது. செப்டம்பர் 19ம் தேதி தோனியை காண ஆவலோடு காத்திருந்த ரசிகர்களின் கனவு நனவாகுமா?