விசில் போடு: நீங்கியது தடை, சிஎஸ்கே ரிட்டர்ன்!
’சென்னை சூப்பர் கிங்ஸ்' அணிக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியதை அடுத்து அந்த டீம் மீண்டும் விசில் போட ரெடியாகிவிட்டது.
ஐ.பி.எல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2 முறை சாம்பியன் படத்தை வென்றது. அனைத்து ஐ.பி.எல் போட்டிகளிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி இதுதான். கடந்த 2015-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக, சூதாட்டப் புகார் எழுந்தது. இதனால், அந்த இரண்டு அணிகளும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன. இந்தத் தடை வியாழக்கிழமையுடன் முடிந்துவிட்டது. இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் களமிறங்குகிறது. இதுகுறித்து, அந்த அணி தனது டிவிட்டர் பக்கத்தில், ’வந்துட்டோம்னு சொல்லு, திரும்பி வந்துட்டோம்னு சொல்லு...விசில் போடு’ கூறியுள்ளது.
2015-ல் ஆடிய அதே டீமை மீண்டும் கொண்டு வர சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுபற்றி சிஎஸ்கே அணியின் இயக்குனர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜான் கூறும்போது, ‘பழைய வீரர்களையே எடுப்பதாக இருந்தால் கண்டிப்பாகத் தோனிதான் கேப்டன். இதுபற்றி இன்னும் தோனியிடம் பேசவில்லை. ஆனால் கண்டிப்பாகப் பேசுவோம்’ என்று கூறியுள்ளார்.