“2022ஆம் ஆண்டு ஐபிஎல் வரை தோனி கண்டிப்பாக விளையாடுவார்” - சிஎஸ்கே சிஇஓ
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் தோனி 2022ஆம் ஐபிஎல் வரை கண்டிப்பாக விளையாடுவார் என சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய காசி விஸ்வநாதன், “இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் தோனி தான் கேப்டன். அடுத்த ஆண்டும் (2021), அதற்கு அடுத்த ஆண்டும் (2022) அவரே கேப்டனாக தொடர்வார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
தற்போது தோனி ஜார்க்கண்டில் வலைப்பயிற்சி எடுப்பதாக ஊடகங்களின் வாயிலாக நான் கேள்விப்பட்டேன். ஆனால் அவரது ஆட்டத்திறன் குறித்து எந்த கவலையும் எங்களுக்கு இல்லை. அவருடைய பொறுப்பு என்ன என்பது அவருக்கு தெரியும். அவருக்கு தனது கிரிக்கெட் திறனையும், அணியையும் எப்படி வழிநடத்த வேண்டும் எனவும் தெரியும்” என்றார்.
ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் தோனி. இரண்டு ஆண்டுகள் தடைக்காலம் தவிர்த்து, மொத்தம் 10 ஐபிஎல் தொடர்களை தோனி தலைமையில் சென்னை அணி சந்தித்துள்ளது. இதில் 8 முறை இறுதிப் போட்டி வரை சென்னை அணி சென்றிருக்கிறது. அத்துடன் 3 முறை சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது. மேலும், ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் தோனி தான் என்பது குறிப்பிடத்தக்கது.