‘அது உள்ளுணர்வுகளின் வெளிப்பாடு’ தன் பெயரில் வீடு கட்டிய ரசிகருக்கு தோனி உருக்கமான நன்றி!
ரசிகர்களின் மீதான அன்பிற்கு அளவே இல்லை. எப்படி கடலின் ஆழத்தை அளவிட முடியாதோ அது போல தான் ரசிகர்களின் அன்பும்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன். துபாயில் உள்ள ஆன்லைன் டிரேடிங் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் அவர் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக தனது வீட்டை மஞ்சள் நிற பெயிண்டினால் அலங்கரித்து, அதில் தோனியின் படத்தை வரைந்து அசத்தினார். அதோடு அவரது வீட்டிற்கு ‘HOME OF DHONI FAN’ எனவும் பெயரிட்டிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் அது வைரலானது.
இந்நிலையில் அது தோனியின் பார்வையையும் பெற்றுள்ளது. அது குறித்து தோனியும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“நான் அதை இன்ஸ்ட்டாகிராமில் பார்த்திருந்தேன். இது அன்பின் வெளிப்பாடு. அதே நேரத்தில் இது என்னை சார்ந்தது மட்டும் அல்ல. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரிய ரசிகர் என்பதையும் நிரூபித்துள்ளார்.
அவர்களது உள்ளுணர்வின் வெளிப்பாடு இது. மேலும் இன்ஸ்ட்டாகிராம், ஃபேஸ்புக் போஸ்ட் அல்ல இது. காலத்தால் அழிக்க முடியாதது. அவரது குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் தான் இதை அவர் செய்திருக்க முடியும். அதனால் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் எனது நன்றி” என தோனி தெரிவித்துள்ளார்.