இந்திய கிரிக்கெட் மகளிர் அணியினர் நாடு திரும்பினர் - அமோக வரவேற்பு
உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய மகளிர் அணி நாடு திரும்பியது. மும்பை விமான நிலையம் வந்தடைந்த வீராங்கனைகளுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்கள் உலகக்கோப்பையில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டி வரை சென்றது. கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி இங்கிலாந்திடம் போராடி தோற்றது. இதனால் இந்திய அணியின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது.
இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த போதும் இந்திய அணி வீராங்கனைகளுக்கு பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் சச்சின், சேவாக் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய மகளிர் அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. மும்பை விமான நிலையம் வந்தடைந்த அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.