நடப்பு ஐபிஎல் சீசன் கிரிக்கெட்டில் சென்னை மைதானத்தில் இலக்கை கடப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. மைதானத்தில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகள் குறித்து அலசலாம்.
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானம் என்று அறியப்பட்ட சென்னை சேப்பாக்கம் மைதானம் நடப்பு ஐபிஎல் சீசனில் இலக்கை துரத்துவதற்கு மிகவும் கடினமான மைதானமாக மாறியுள்ளது. இங்கு நடந்த 4 போட்டிகளில் மூன்றில் இரண்டாவதாக பந்து வீசிய அணிகளே வெற்றி பெற்றுள்ளன. வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட ஒரு போட்டியிலும் கடைசி பந்திலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமின்றி SLOWER பந்துகள் வீசும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக ஒத்துழைக்கிறது சென்னை மைதானம்.
சீசனின் முதல் போட்டியில் தொடக்கத்தில் அதிரடியாக ரன்களைக் குவித்த மும்பை அணி, ஆடுகளத்தின் தன்மை மாறியவுடன் மளமளவென விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே எடுத்தது. சராசரியான இலக்கை துரத்திய பெங்களூரு அணியை ஆட்டத்தின் கடைசி பந்து வரை இழுத்துச் சென்றது ஆடுகளம். சென்னையில் நடந்த இரண்டாவது போட்டியான ஐதராபாத், கொல்கத்தா இடையிலான பலப்பரீட்சையிலும் முதலில் பேட் செய்த கொல்கத்தாவே வென்றது.
சீசனின் ஐந்தாவது போட்டியான கொல்கத்தா, மும்பை இடையிலான பலப்பரீட்சை தான் சென்னை மைதானத்தின் மீது மற்ற அனைத்து அணிகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணியை அடித்தது. 152 ரன்களை மிகவும் எளிதாக சேஸ் செய்யக் கூடிய தருவாயில் கொல்கத்தா இருந்த நிலையில், இலக்கை எட்ட முடியாமல் கோட்டை விட்டது.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நான்காவது போட்டியிலும் முதலில் பேட் செய்த அணிக்கே வெற்றி கை கூடியது. முதலில் பேட் செய்த பெங்களூரு 149 ரன்களை மட்டுமே இருந்தது. இலக்கை சிரமமின்றி துரத்திக் கொண்டிருந்த ஐதராபாத் அணியை கடைசி 4 ஓவர்களில் ஸ்தம்பிக்க வைத்தது சென்னை மண். வெற்றியின் வாசலில் இருந்த ஐதராபாத் சேஸ் செய்ய முடியாமல் அதிர்ச்சி தோல்வி கண்டது.
எப்போதும் சுழற்பந்துக்கு சாதகமாக பார்க்கப்படும் சென்னை மைதானத்தில், வேகப்பந்து வீச்சாளர்களும் முழு வேகத்தில் பந்துகளை வீசாமல் களத்தின் தன்மைக்கு ஏற்ப அதிகளவில் SLOWER பந்துகளை வீசத் தொடங்கியுள்ளனர். இது பேட்ஸ்மேன்களை கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கி வருகிறது.
பெரும்பாலும் இலக்கை துரத்தவே ஆர்வம் காட்டும் இருபது ஓவர் கிரிக்கெட்டில், யோசனையே இன்றி பேட்டிங்கை தேர்வு செய்ய வைக்கிறது சென்னை மைதானம். இனி வரும் போட்டிகளிலும் சென்னை மண் சேஸிங் செய்ய நெருக்கடிக்கு கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.