குரோஷியா புயலில் சிதறிய பிரேசில் - நெதர்லாந்தை கதறவிட்ட அர்ஜென்டினா- இது பரபர FIFA

குரோஷியா புயலில் சிதறிய பிரேசில் - நெதர்லாந்தை கதறவிட்ட அர்ஜென்டினா- இது பரபர FIFA
குரோஷியா புயலில் சிதறிய பிரேசில் - நெதர்லாந்தை கதறவிட்ட அர்ஜென்டினா- இது பரபர FIFA

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டிகளில் வெற்றிபெற்ற குரோஷியா, அர்ஜென்டினா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.

விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ள கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று இரண்டு காலிறுதி போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் குரோசியா, பலம்வாய்ந்த பிரேசில் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் பிரேசில் அணி எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்த்த நிலையில், குரோசியா மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில், முதல்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தங்களுக்கு கிடைத்த கோல் வாய்ப்புகளை தவறவிட்டன. இதையடுத்து முதல்பாதி ஆட்டம் கோல் ஏதும் இன்றி சமனில் முடிந்தது.

இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டம் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் மிகவும் விறு விறுப்பாகவும் பரபரப்பாகவும் இருந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரு அணியும் கோல் அடிக்காத நிலையில், கூடுதல் நேர ஆட்டம் நடைபெற்றது. இதில், ஆட்டத்தின் 105 வது நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர், ஒன் டூ பாஸ் மூலம் குரோசியா வீரர்களை மின்னல் வேகத்தில் கடந்து சென்று தனது அணிக்காக ஒருகோல் அடித்தார். இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் களத்தில் நீயா நானா என கடுமையாக மோதிக் கொண்டனர், பிரேசில் வெற்றிபெறும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், ஆட்டத்தின் 117-வது நிமிடத்தில் குராஷியா வீரர் பெட்கோவிக் ஒருகோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.

இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் மேலும் கோல் அடிக்காததால் டை-பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், குரோஷியா 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தோல்வியை தழுவிய பிரேசில் அணி தொடரில் இருந்த வெளியேறியது உலக கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்த நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில் பலம்வாய்ந்த அர்ஜென்டினா அணி நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. இதில். முதல்பாதி ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் மோலினா ஒருகோல் அடித்து தனது அணியை முன்னிலை படுத்தினார். இந்நிலையில், முதல்பாதி ஆட்டத்தின் முடிவில் அர்ஜென்டினா அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஒருகோல் அடிக்க அர்ஜென்டினா அணியில் கோல் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. இந்நிலையில், அர்ஜென்டினா வெற்றி பெற்றுவிடும் என எண்ணிய ரசிர்களுக்கு நெதர்லாந்து அதிர்ச்சி அளித்தது. ஆட்டத்தில் 83, மற்றும் 90 -வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வேக்ஹார்ஸ்ட் இரண்டு கோல்கள் அடித்து போட்டியை சமன் செய்தார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூடுதல் நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், டை-பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், அர்ஜென்டினா 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தோல்வியை தழுவிய நெதர்லாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் மொராக்கோ, போர்ச்சுகல் அணியுடன் மோத உள்ளது. அதேபோல் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் இங்கிலாந்து பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com