விமானி ஆவதற்காக, விரும்பி விளையாடிய கிரிக்கெட்டை கைவிட்டுள்ளார் வீரர் ஒருவர்.
ஹாங்காங் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிறிஸ் கார்டர். 20 வயதான கார்டர், அந்த அணியின் தூணாக இருந்தவர். சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பைத் தொடரில் பங்கேற்ற கார்டர், இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியவர். 11 சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ள 10 டி20 போட்டியிலும் பங்கேற்றுள்ளார். இவர் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இளம் வயதிலேயே கிரிக்கெட்டை கைவிட்டது ஏன் என்று கேட்டபோது, ‘ஏற்கனவே என் படிப்பை கிரிக்கெட்டுக்காக பாதியில் விட்டிருந் தேன். என் படிப்பை தொடர்வதற்கான சரியான தருணம் இதுதான். பைலட் ஆக வேண்டும் என்பது என் ஆசை.
ஆஸ்திரேலியா சென்று கதே பசிப்பிக் விமான நிறுவனத்தில் பைலட்டுக்கான பயிற்சி பெறப் போகிறேன். ஹாங்காங் போன்ற நாடுகளில் கிரிக்கெட் வீரராக இருப்பது கடினம். இங்கு கிரிக்கெட்டுக்கு அதிக பணம் ஒதுக்குவதில்லை. ஹாங்காங் கிரிக்கெட் அமைப்பு அதிகமாக உழைத்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஹாங்காங் அரசிடம் இருந்தும் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. அதனால் கிரிக்கெட்டில் இருந்து விலகுகிறேன். எதிர்காலத்தில் ஹாங்காங் அணிக்காக விளையாடலாம்’ என்று தெரிவித்துள்ளார்.