”இத மட்டும் பண்ணுங்க.. எதிரணியை சேர்ந்து மிரட்டலாம்” - உம்ரானுக்கு முகம்மது ஷமி அட்வைஸ்!

”இத மட்டும் பண்ணுங்க.. எதிரணியை சேர்ந்து மிரட்டலாம்” - உம்ரானுக்கு முகம்மது ஷமி அட்வைஸ்!
”இத மட்டும் பண்ணுங்க.. எதிரணியை சேர்ந்து மிரட்டலாம்” - உம்ரானுக்கு முகம்மது ஷமி அட்வைஸ்!

இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான முகம்மது ஷமி, மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், 2வது போட்டியில் வெற்றிக்கான பங்களிப்பைத் தந்தவர் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி. அவர், 6 ஓவர்கள் வீசி 1 மெய்டன் உள்பட 3 முக்கிய விக்கெட்களைக் கைப்பற்றினார். இதனால், நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களில் 108 ரன்களுக்குச் சுருண்டது. பின்னர் ஆடிய இந்திய அணி, 20.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் முகம்மது ஷமிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், முகம்மது ஷமியை மற்றொரு இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் பேட்டி எடுப்பதற்கு பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்தது. ராய்ப்பூர் மைதானத்தில் நடந்த இந்த உரையாடலின்போது, ”தாம் முன்னேறுவதற்கு சில ஆலோசனைகளை வழங்குங்கள்” என்று முகமது ஷமியிடம் உம்ரான் மாலிக் கேட்டார். அதற்கு ஷமி, “முதலில் உங்களுக்கு எனது வாழ்த்துகள். உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அப்போது, நீங்கள் இதைவிட இன்னும் சிறப்பாக செயல்படுவீர்கள்.

நீங்கள், உங்கள் திறமையை மட்டும் நம்புங்கள். வேகமாய் விக்கெட்டை வீழ்த்துவதில் முயற்சி செய்யுங்கள். உங்களிடம் நிறைய திறமை இருக்கிறது. இயல்பாகவே நல்ல வேகத்தைக் கொண்டுள்ள நீங்கள், கோட்டுக்குள் நேர்த்தியாக பந்துவீசுவதில் கவனம் செலுத்தினால் யாராலும் உங்களைத் தொட முடியாது. ஒருமுறை நீங்கள் அதில் கடினமாக உழைத்து தேவையான மாற்றங்களை செய்து வெற்றி கண்டுவிட்டால், அதன்பின் நாம் இருவரும் சேர்ந்து உலகின் எதிரணிகளை மிரட்டலாம்” என ஆலோசனை வழங்கியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த உம்ரான் மாலிக், முதல் டி20 போட்டியில் அவரது கடைசி ஓவரில் அதிகபட்சமாக 155 கிமீ வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக ஜஸ்ப்ரித் பும்ரா அதிகபட்சமாக 153.36 கிலோ மீட்டர் வேகத்திலும், முகமது ஷமி 153.3 கிமீ வேகத்திலுமே பந்து வீசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரின்போது முதல் போட்டியில் 2 விக்கெட்கள், இரண்டாவது போட்டியில் 3 விக்கெட்கள் 3வது போட்டியில் 2 விக்கெட்கள் என மொத்தம் 7 விக்கெட்களை உம்ரான் கைப்பற்றியிருந்தார். அதுபோல இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்களை அள்ளியிருந்தார். இருப்பினும் நியூசிலாந்து தொடரில் அவர் இடம்பெற்றும் முதல் இரண்டு போட்டிகளில் ஆடும் லெவனில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com