“உங்களது கதைத்தேர்வு என்னை வியக்க வைக்கிறது நண்பா”- ‘எஃப்.ஐ.ஆர்.’ட்ரெய்லரை வியந்த அஸ்வின்!
விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘எஃப்.ஐ.ஆர்.’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த ட்ரெய்லர் குறித்து இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான அஸ்வின் ரவிச்சந்திரன் கருத்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தில் நாயகனாக வரும் விஷ்ணு விஷாலின் கதாபாத்திரப் பெயர் ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ். இதன் முதல் எழுத்துக்களை வைத்து ‘எஃப்.ஐ.ஆர்.’ என படத்துக்கு பெயர் வைத்துள்ளனர். தீவிரவாதம் குறித்த கதையிது என்று கூறியுள்ளது படக்குழு. இதில் விஷ்ணு விஷாலுடன் முக்கிய வேடத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரெபேகா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோரும் நடித்துள்ளனர். மனு ஆனந்த் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்துக்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார். கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட இந்தப் படம், பிப்ரவரி 11-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தின் ட்ரெய்லர் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், “அற்புதமான ட்ரெய்லர். படத்தைக் காண காத்திருக்க முடியவில்லை நண்பா. வழக்கம் போல் உங்களது கதைத்தேர்வு என்னை வியக்க வைக்கிறது நண்பா” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், “மிக்க நன்றி நண்பா. உங்களது பந்துவீச்சு மாறுபாடுகள் மற்றும் சாதனைகளை விட இது ஒன்றும் நிச்சயமாக அற்புதமானது இல்லை...” என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே விஷ்ணு விஷால் கிரிக்கெட் வீரராக, கடந்த 2014-ம் ஆண்டு ‘ஜீவா’ என்ற திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.