
2023-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், அதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் 10 அணிகளுக்கு இடையே நடைபெற்றுவருகிறது. உலகக்கோப்பையில் பங்கேற்று விளையாடுவதற்கான கடைசி இரண்டு இடங்களுக்கான இந்த போட்டியில், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து மற்றும் ஜிம்பாப்வே முதலிய அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
இதில் ஜிம்பாப்வே அணி சொந்த மண்ணில் நடைபெறுவதை சாதகமாக பயன்படுத்தி சிறப்பாக ஆடிவருகிறது. கிட்டத்தட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் உலகக்கோப்பை கனவை சிதைத்திருக்கும் ஜிம்பாப்வே, அதன் அபாரமான ஆட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வெற்றிநடை போட்டுவருகிறது.
இன்றைய போட்டியில் யுஎஸ்ஏ அணியை எதிர்கொண்டு விளையாடிய ஜிம்பாப்வே அணியில், 21 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என துவம்சம் செய்து கடைசிவரை களத்தில் நின்ற ஜிம்பாப்வே கேப்டன் சீன் வில்லியம்ஸ் 174 ரன்களை குவித்தார். ஒருபுறம் சீன் வில்லியம்ஸ் பட்டையை கிளப்ப, மறுமுனையில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய சிக்கந்தர் ராஷா அணியை நல்ல டோட்டலுக்கு எடுத்துச்செல்ல உதவினார். பின்னர் இறுதியாக களத்திற்கு வந்த ரியான் பர்ல் 16 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டி 47 ரன்களை அடிக்க இறுதியில் 408 ரன்களை எட்டியது ஜிம்பாப்வே அணி.
கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 400 ரன்களை பதிவு செய்து அசத்தியது ஜிம்பாப்வே அணி. இதற்கு முன்பு 2009ஆம் ஆண்டில் 351 ரன்கள் அடித்ததே அந்த அணியின் அதிகபட்ச ரன்களாக இருந்தது. இந்நிலையில் 409 என்ற இமாலய இலக்கை துறத்திய யுஎஸ்ஏ அணி, ஜிம்பாப்வேவின் சிறப்பான பந்துவீச்சு தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. 304 என்ற பெரிய மார்ஜின் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ள ஜிம்பாப்வே அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் உலகக்கோப்பை கனவை மேலும் ஆட்டம் காண வைத்துள்ளது.
101 பந்துகளில் 172 ஸ்டிரைக் ரேட்டுடன் 174 ரன்களை அடித்திருக்கும் சீன் வில்லியம்ஸ், 3ஆவது இடத்தில் இறங்கி அதிகபட்ச ஸ்டிரைக் ரேட்டுடன் அதிவேகமாக 150 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 434 ரன்கள் வரலாற்று சேஸிங் போட்டியில், 157 ஸ்டிரைக்ரேட்டுடன் கிப்ஸ் அடித்த 175 ரன்களே அதிவேக 150+ ரன்களாக இருந்துவந்தது. அதற்கடுத்த இடத்தில் அதே போட்டியில் 156 ஸ்டிரைக் ரேட்டுடன் ரிக்கிபாண்டிங் அடித்த 164 ரன்களும், விராட் கோலி 150 ஸ்டிரைக்ரேட்டுடன் அடித்த 166 ரன்களும் இருக்கின்றன.
இந்நிலையில் இந்த 3 பேரையும் பின்னுக்கு தள்ளியிருக்கும் சீன் வில்லியம்ஸ் 3ஆவது நம்பரில் பேட்டிங் இறங்கி அதிவேக 150 ரன்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.