“ரோகித் சர்மா நல்ல கேப்டன் தான்.. ஆனால் தோனியிடம் இருந்தது அவரிடம் இல்லை” - யுவராஜ் சிங்!

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் இந்திய அணி கோப்பை வெல்லுமா? ரோகித் கேப்டனாக எப்படி செயல்பட போகிறார்? என்பது குறித்து பேசியுள்ளார் யுவராஜ் சிங்.
Dhoni - Rohit
Dhoni - RohitTwitter

2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கி நடைபெறவுள்ளது. முழுக்க முழுக்க அனைத்து உலகக்கோப்பை போட்டிகளும் இந்தியாவில் உள்ள ஆடுகளங்களில் மட்டுமே நடைபெறவுள்ளதால், இந்திய அணி கோப்பை வெல்வதற்கான சூழல் அதிகமாக இருக்கிறது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா போன்ற வீரர்கள் இல்லாதது பேட்டிங் வரிசை மட்டுமில்லாமல் பந்துவீச்சு காம்போ உட்பட பல விசயங்களில் இந்தியா பலவீனமாக தெரிகிறது. இதற்கிடையில் மாற்றுவீரர்களாக விளையாடிவரும் இளம் வீரர்களும் அழுத்தமான நேரங்களில் கோட்டைவிடுவதால் உலகக்கோப்பைக்கான கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

Rohit-Dhoni
Rohit-Dhoni

இந்நிலையில், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்திய அணியின் 15 வீரர்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரரும், 2011 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்றவருமான யுவராஜ் சிங்கும் இந்திய அணியின் நிலை குறித்தும், ரோகித் சர்மா குறித்தும் பேசியுள்ளார். 2 உலகக்கோப்பை வென்றவரான யுவராஜ் சிங், உலகக்கோப்பை வெல்வதற்கான சிறந்த கேப்டனாக ரோகித் சர்மா இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தோனி சிறந்த கேப்டன் தான்..ஆனால் அவரிடம் நல்ல அணி இருந்தது!

இந்திரனில் பாசு உடனான பிரத்யேக உரையாடலில் பேசியிருக்கும் யுவராஜ் சிங், “ஒரு அணியின் கேப்டன் சிறந்த கேப்டனாக இருந்தால் மட்டும் போதாது, அவருக்கான அணியும் சிறந்த அணியாக இருக்க வேண்டும். என்னை பொறுத்தவரையில் ரோகித் சர்மா ஒரு நல்ல கேப்டன் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவருக்கு நீங்கள் ஒரு நல்ல அணியை வழங்க வேண்டும். நம் எல்லோருக்கும் தெரியும் எம்எஸ் தோனி ஒரு நல்ல கேப்டனாக இருந்தார் என்று. அதேநேரம் அனுபவமிக்க வீரர்களைக் கொண்ட ஒரு கலவையான அணியையும் அவர் கொண்டிருந்தார்” என்று கூறியுள்ளார். 2011 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு முன்பாக இந்திய அணியில் இடம்பெற்றிருந்த மூத்தவீரர்கள் 2 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரோகித் சர்மா ஒரு சிறந்த கேப்டனாக தன்னை வளர்த்துகொண்டுள்ளார் என்று நம்புவதாக கூறியிருக்கும் அவர், “ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வலுவான அணியாக தன்னை நிரூபித்துள்ளது. நீண்ட காலமாக அந்த அணியை சிறப்பான முறையில் வழிநடத்தியிருக்கும் ரோகித் சர்மா, ஒரு சிறந்த தலைவராக மாறிவிட்டார் என்று தான் நான் நினைக்கிறேன். நாம் நிறைய போட்டிகளில் பார்த்து இருக்கிறோம் பல அழுத்தமான போட்டிகளில் அவர் விவேகமாக செயல்படக்கூடியவர். அனுபவம் வாய்ந்த ஒரு விவேகமான கேப்டனுக்கு நீங்கள் ஒரு நல்ல அணியை வழங்க வேண்டியது தான் சரியானதாக இருக்கும். எம்.எஸ். தோனி வெற்றி கேப்டனாக இருந்த போது, அவரிடம் ஒரு நல்ல அணி இருந்தது சரி தானே?” என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com