
நடப்பு ஆசியக் கோப்பை தொடரின் கடைசி சூப்பர் 4 போட்டி வெள்ளிக்கிழமையன்று இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்றது. கொழும்புவில் நடந்த போட்டியில் வெற்றியின் அருகாமையில் இருந்த இந்திய அணியை தங்களுடைய சிறப்பான பந்துவீச்சு தாக்குதலால் தோல்விக்கு அழைத்து சென்றனர் வங்கதேச பவுலர்கள்.
266 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியில் கடைசிவரை களத்தில் இருந்த சுப்மன் கில் சதமடித்து அசத்தினார். தன்னுடைய 5வது ஒருநாள் சதத்தை பதிவு செய்திருக்கும் கில்லிற்கு, இந்த வருடத்தில் மட்டும் இது 4வது சதமாகும்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்த போதும் 121 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்த சுப்மன் கில், மெஹிதி ஹாசன் வீசிய 44வது ஓவரில் தவறான ஷாட் ஆடி பெவிலியன் திரும்பினார். அவர் இருக்கும் வரை இந்திய அணிக்கு தான் வெற்றி என்று இருந்த நிலைமை, அவர் சென்றதும் அப்படியே தலைகீழாக மாறியது. கில்லின் விக்கெட்டுக்கு பிறகு 10 ரன்களில் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது இந்திய அணி. முடிவில் கடைசி 2 ஓவருக்கு 17 ரன்களை கூட அடிக்க முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஒருவேளை கில் அந்த ஷாட்டை ஆடாமல் தள்ளிவிட்டு ஆடியிருந்தால் கூட இந்திய அணி வெற்றியை ருசித்திருக்கும்.
கில்லின் மோசமான ஷாட்டை விமர்சித்திருக்கும் யுவராஜ் சிங் அவருடைய இன்ஸ்டா பதிவிற்கு பதிலளித்துள்ளார். அதில், “வெளியேறுவதற்கு மோசமான ஷாட் அது. நீங்கள் கடைசிவரை நின்று ஒற்றைக் கையால் ஆட்டத்தை வென்றிருக்க வேண்டும். இருப்பினும் சிறப்பாக விளையாடினீர்கள்” என்று பதிலளித்துள்ளார்.
போட்டியின் தோல்விக்கு பிறகு பேசிய சுப்மன் கில் கூட அவருடைய மோசமான செயல்பாட்டை ஒப்புக்கொண்டார். அப்போது பேசிய அவர், “உண்மையில் நான் அவுட்டானபோது, நீ எதையோ தவறாக செய்துவிட்டாய் என்று தோன்றியது. நான் என்னுடைய ஆக்ரோசத்தை கட்டுப்படுத்தி நிதானமாக ஆடியிருக்க வேண்டும். ஒருவேளை நான் ஆக்ரோசமாக ஆடாமல் இருந்திருந்தால் நாங்கள் வெற்றி கோட்டை கடந்திருப்போம். இது முழுக்க என்னுடைய தவறு. ஆனால் இதிலிருந்து நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இது எங்களுக்கு கடைசி ஆட்டம் இல்லை” என்று பேசியிருந்தார்.