வளர்ச்சிக்கு உதவிய இடத்திற்கு நன்றிக்கடன்.. ஜெய்ஸ்வால் செயலுக்கு குவியும் பாராட்டு!
மும்பையின் இளம் கிரிக்கெட் வீரர்களை வளர்த்தெடுக்கும் தொடர்களாக ஹாரிஸ் ஷீல்ட் (Harris Shield) மற்றும் கில்ஸ் ஷீல்ட் (Giles Shield) கிரிக்கெட் போட்டிகள் இருந்துவருகின்றன. ஹாரிஸ் ஷீல்ட் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும், கில்ஸ் ஷீல்ட் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குமான கிரிக்கெட் கனவுபாதையை அமைத்து தருவதை 120 ஆண்டுகளுக்கும் மேலாக செய்துவருகிறது.
சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், வினோத் காம்ப்ளி, திலீப் வெங்சர்க்கார், பிரித்வி ஷா, சர்பராஸ் கான் போன்ற வீரர்களை இந்திய கிரிக்கெட்டிற்கு கொடுத்தபெருமை ஹாரிஸ் ஷீல்ட்டுக்கே சேரும். அவர்களை கடந்து வறுமையான பின்னணியிலிருந்து வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஹாரிஸ் ஷீல்டு போட்டியில் விளையாடியுள்ளார்..
இந்தசூழலில் தான் வளர்ச்சிக்கு பங்காற்றிய ஹாரிஸ் ஷீல்டுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், இரண்டு தொடருக்குமான வெற்றியாளர் விருதுக்கு ஸ்பான்சர் செய்ய வழங்கவிரும்புவதாக தெரிவித்துள்ளார்..
ஜெய்ஸ்வால் செயலுக்கு குவியும் பாராட்டு..
2025 ஹாரிஸ் ஷீல்ட் மற்றும் கில்ஸ் ஷீல்ட் சீசனின் இறுதிப் போட்டிகளுக்கான "சிறந்த பேட்ஸ்மேன்" விருதை வழங்க இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விருப்பம் தெரிவித்துள்ளதாக மும்பை பள்ளி விளையாட்டு சங்கம் (MSSA) தெரிவித்துள்ளது.
ஜெய்ஸ்வாலின் இந்த செயல், பள்ளி அளவிலான கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கவும், ஆதரிக்கவும் நோக்கமாகக் கொண்டதாக MSSA பாராட்டியுள்ளது. போட்டியின் சிறந்த பேட்ஸ்மேனுக்கான முழுமையான கிரிக்கெட் கிட்டை ஜெய்ஸ்வால் வழங்கவிருக்கிறார். மதிப்புமிக்க ஹாரிஸ் மற்றும் கில்ஸ் ஷீல்ட் போட்டிகளின் இறுதிப் போட்டிக்குப் பிறகு நடைபெறும் அதிகாரப்பூர்வ பரிசு வழங்கும் விழாவின் போது இந்த விருது வழங்கப்படும் என தெரிகிறது.
இதுகுறித்து செய்தி வெளியிட்டிருக்கும் மும்பை பள்ளி விளையாட்டு சங்கம், “இது ஜெய்ஸ்வாலின் பாராட்டத்தக்க செயலாகும், அவர் தன்னுடைய வளர்ச்சி காலங்களில் ஹாரிஸ் ஷீல்டில் விளையாடியுள்ளார். இந்த போட்டியுடன் அவர் கொண்டிருக்கும் தொடர்பு, ஆழ்ந்த நன்றியுணர்வு மற்றும் மரியாதையையும் காட்டுகிறது. அவரது கிரிக்கெட் பயணத்தை வடிவமைக்க உதவிய தளத்திற்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது” என பாராட்டியுள்ளது.
1988-ம் ஆண்டு நடைபெற்ற ஹாரிஸ் ஷீல்டு போட்டியில், தாதரின் சாரதாஷ்ரம் வித்யா மந்திர் அணிக்காக சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளி இருவரும் இணைந்து 664 ரன்கள் என்ற மறக்கமுடியாத பார்ட்னர்ஷிப் போட்டு வரலாற்றில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது..

