"What a journey" - ஓய்வை அறிவித்தார் ரித்திமான் சாஹா! சக வீரர்கள் செய்த நெகிழ்ச்சியான சம்பவம்!
இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் பெங்காலைச் சேர்ந்த ரித்திமான் சாஹாவிற்கும் இடம் உண்டு. இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் சாஹா, 3 டெஸ்ட் சதங்களையும் 6 அரைசதங்களையும் அடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் ரித்திமான் சாஹா வைத்துள்ளார்.
தன்னுடைய அசாத்தியமான விக்கெட் கீப்பிங் திறமையால் இந்தியாவின் நம்பர் 1 விக்கெட் கீப்பராக ஜொலித்த போது ‘தற்போதைக்கு உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா’ என்று புகழாரம் சூட்டினார் அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி.
அந்தளவு இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட் கீப்பிங் திறமையாக பார்க்கப்பட்ட ரித்திமான் சாஹா, தற்போது அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வை அறிவித்தார் ரித்திமான் சாஹா..
ரஞ்சிப்போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடிவரும் ரித்திமான் சாஹா, பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கு பிறகு அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் பெங்கால் அணி வீழ்த்தியிருக்கும் இருக்கும் நிலையில், கடைசி போட்டியில் விளையாடிய ரித்திமான் சாஹாவை சக வீரர்கள் தோளில் சுமந்துவந்தனர்.
40 வயதான ரித்திமான் சாஹா தன்னுடைய ஓய்வு குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு எமோசனல் பதிவை போஸ்ட் செய்துள்ளார். அதில் சாஹா தனது 28 ஆண்டுகால வாழ்க்கைக்கு நன்றி தெரிவித்ததோடு, தனது நாடு, மாநிலம், மாவட்டம், கிளப்புகள், பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பள்ளியை பிரதிநிதித்துவப்படுத்தியது தனது வாழ்க்கையின் மிகப்பெரிய கவுரவம் என்று கூறியுள்ளார்.
ஓய்வை அறிவித்த ரித்திமான் சாஹாவிற்கு சகவீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.