
2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரானது வருகின்ற அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், ஏற்கெனவே 8 அணிகள் (இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், தென்னாப்பிரிக்கா) தகுதி பெற்றுவிட்டன.
மற்ற இரண்டு இடங்களுக்கு 10 அணிகள் (ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து, இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், நேபாளம், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) போட்டி போடுகின்றன. இந்த 10 அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று கடந்த ஜூன் 18 முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த 10 அணிகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வந்தன. இதில் இரண்டு சுற்றிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகள், அடுத்த சுற்றான சூப்பர் 6க்கு முன்னேறின.
’குரூப் ஏ’யில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் ‘குரூப் பி’யில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகளும் முதல் 3 இடங்களுக்கான புள்ளிகளைப் பெற்று முன்னேறின. அதன்படி, இன்று நடைபெற்ற உலகக்கோப்பை தகுதிச் சுற்று தொடரில் குரூப் ஏவில் 3வது இடம் பிடித்திருந்த வெஸ்ட் இண்டீஸ், பி பிரிவில் 2வது இடம் பிடித்திருந்த ஸ்காட்லாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது.
இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த ஸ்காட்லாந்து, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் 43.5 ஓவர்களுக்கு அனைத்தும் விக்கெட்களையும் இழந்து வெறும் 181 ரன்களை மட்டுமே எடுத்தது. அதாவது, டி20யில் எடுக்கக்கூடிய ரன்னாக இது அமைந்தது. அவ்வணியில் ஹோல்டர் மட்டும் அதிகபட்சமாக 45 ரன்களை எடுத்தார். ஸ்காட்லாந்து அணியில் மெக்முல்லன் 3 விக்கெட்களையும், சோலே, வாட், கீரிவெஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
பின்னர் இலகுவான இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, 43.3 ஓவர்களிலேயே 185 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. அவ்வணியில் கிராஸ் 74 ரன்களும், மெக்முல்லன் 69 ரன்களும் எடுத்தனர்.
இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியுற்றதால், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது. அதாவது நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்கான தகுதியை அதிகாரப்பூர்வமாக இழந்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்று உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக கருதப்பட்டு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பை தொடரில் விளையாடக்கூட தகுதி பெற முடியாத நிலைக்கு வந்ததை ரசிகர்கள் பலரும் வருத்தத்துடன் பதிவிட்டு வருகிறார்கள்.