\
இலங்கை மகளிர் அணி
இலங்கை மகளிர் அணிasian cricket council

மகளிர் ஆசிய கோப்பை| பாகிஸ்தான் கேப்டனின் விடாமுயற்சி வீண்.. FINAL சென்றது இலங்கை!

2026 மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது இலங்கை அணி.
Published on
Summary

2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் துபாயில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவின் வீரத்தன்மை வீணானது. 47 ரன்கள் அடித்து, பந்துவீச்சிலும் 4 விக்கெட்டுகள் எடுத்து இலங்கை அணியை 33/4 என சிக்கவைத்தார். ஆனால் ஹர்ஷிதா-கவிஷா கூட்டணியின் 60 ரன் பார்ட்னர்ஷிப் இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கு இட்டுச் சென்று, இந்தியாவுடன் இறுதியில் மோதும் வாய்ப்பை பெற்றது.

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 ஆசிய அணிகள் பங்கேற்று விளையாடிய 2026 மகளிர் ஆசிய கோப்பை தொடர் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. துபாயில் நடந்துவரும் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், முதல் அரையிறுதியில் வங்கதேசத்தை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

இந்நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 52 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது பொறுப்புடன் விளையாடிய பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா 36 பந்தில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உதவியுடன் 47 ரன்கள் அடித்து ஸ்கோரை 130 ரன்களாக உயர்த்தினார்.

131 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய பாத்திமா சனா இலங்கை அணியை 33 ரன்னுக்கு 4 விக்கெட்டுகள் சரிய வழிவகை செய்தார். அதற்குபிறகு பாகிஸ்தான் அணியே வெற்றிபெறும் நிலையில் இருந்தது, ஆனால் அதற்பிறகு கைக்கோர்த்த ஹர்ஷிதா-கவிஷா இருவரும் 5வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்துவந்தனர். 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பாத்திமா சனா போராடினாலும், இலங்கை அணியின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியவில்லை.

போட்டியில் முடிவில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணி, நாளை நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com