’3 சதம் அடித்தாலும் ரோகித் - கோலிக்கு இடமிருக்குமா..?’ - உலகக்கோப்பை தேர்வு குறித்து அகர்கர் ஓபன்!
ரோகித் மற்றும் கோலி இருவரும் 3 சதங்கள் அடித்தால் உலகக்கோப்பையில் இடம் என்று அர்த்தமில்லை, இது ரன்களை பற்றியது அல்ல என்று அஜித் அகர்கர் கூறியுள்ளார்..
இந்திய அணியின் மூத்த வீரர்களும், முன்னாள் கேப்டன்களுமான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் ஏற்கெனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவங்களில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டனர். அவர்கள், இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளனர். அதிலும் குறிப்பாக, 2027 உலகக் கோப்பை தொடர் வரை விளையாட வேண்டும் என்பதே அவர்களது இலக்காக இருந்து வருகிறது.
அந்த வகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், அவர்கள் இருவரும் சுப்மன் கில் தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ளனர். எனினும், இந்தத் தொடரே அவர்களது கடைசித் தொடராக இருக்கும் எனப் பலராலும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
அஜித் அகர்கர், ஏபிடி வில்லியர்ஸ், மேத்யூ ஹைடன் உட்பட பல முன்னாள் வீரர்கள் ரோகித் மற்றும் கோலியின் வயதையும், உடற்தகுதியையும் காரணம் காட்டி சரியான முடிவு என்று கருத்தை தெரிவித்தாலும், சமீபத்திய உரையாடலில் கூட ரோகித் சர்மா 'உலகக்கோப்பை விளையாட விரும்புகிறேன்' என்றும், விராட் கோலி 'விட்டுக்கொடுக்க கூடாது' என்று பதிவிட்டதும் அவர்கள் எவ்வளவு உலகக்கோப்பையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டியது..
இந்த சூழலில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம், 2027 உலகக்கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இருப்பார்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “அணியின் தேர்வு செயல்முறை குறித்து முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவிற்கும் தேர்வுக்குழுவிற்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன. உண்மையில் கருத்து வேறுபாடுகள் ஆரோக்கியமானவை. அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பங்கள் உள்ளன. இறுதியில், அதை நாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
முன்பு பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் விரும்புவதற்கும் எங்களுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஏனென்றால், அணியின் நலனுக்காக நாங்கள் முயற்சி செய்கிறோம், சிறந்த 15 பேரைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கிறோம். இதற்கு முன்பு ரோகித்திடம் எப்படி உரையாடினோமோ, அப்படியே சுப்மன் கில்லுடனும் நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம்.
ரோகித் சர்மாவும், விராட் கோலியும் தற்போது அணியில் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் சிறந்த வீரர்கள், நாட்டிற்காக நிறைய ரன்களை குவித்துள்ளார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவில் அவர்கள் 3 சதங்கள் அடித்துவிட்டால் உலகக்கோப்பையில் இடம் என்று அர்த்தமில்லை. நிலைமை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே அவர்களின் இடம் முடிவுக்கு வரும், ஒருவேளை அவர்களின் இடத்தை நிரப்புவதற்கு இளம்வீரர்கள் வரலாம்.. ஆனால் அனைத்திற்கும் இன்னும் நீண்டதூரம் இருக்கிறது” என்று பேசியுள்ளார்.