முதல் போட்டியில் கேப்டன் கேன் வில்லியம்சன் இல்லாமல் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்தப் போட்டியிலும் அவர் இல்லாமல் தான் ஆடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும், இன்னும் ஃபீல்டிங் செய்யும் அளவுக்கு முழு உடல் தகுதி பெறாததால் நியூசிலாந்து நிர்வாகம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறது. அவரைப் போலவே முதல் போட்டியில் விளையாடாமல் இருந்த சீனியர் வேகப்பந்துவீச்சாளர்கள் டிம் சௌத்தி, லாக்கி ஃபெர்குசன் இருவரும் ஃபிட்டாகி வருகிறார்கள் என்றும் அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். டிம் சௌத்திக்கு எக்ஸ்ரே எடுக்கவேண்டும் என்று தெரிவித்த அவர், லாக்கி ஃபெர்குசன் முழுமையாகத் தேறிவிட்டதாகக் கூறினார். ஒருவேளை அவர் களமிறக்கப்பட்டால் ஜேம்ஸ் நீஷம் அணியில் இடத்தை இழக்கலாம்.
நியூசிலாந்து அணிக்கு காயமடைந்த வீரர்கள் கம்பேக் கொடுக்க, நெதர்லாந்து அணிக்கோ புதிய பிரச்சனை எழுந்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் லோகன் வேன் பீக் காயமடைந்துள்ளதாக தெரிகிறது. பேட்டிங், பௌலிங் இரண்டிலும் பங்களிக்கக்கூடிய அவர் harmstring காயத்தால் அவதிப்படுவதாகத் தெரிகிறது. அவர் ஆடமுடியாமல் போனால் அது நெதர்லாந்து அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமையும். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 1 விக்கெட் எடுத்த அவர், பேட்டிங்கிலும் 28 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து: நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை இந்தத் தொடரின் முதல் போட்டியில் சந்தித்த நியூசிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 282 என்ற இலக்கை சேஸ் செய்த அந்த அணி, வெறும் 36.2 ஓவர்களிலேயே சேஸ் செய்து மிரட்டியது. டெவன் கான்வே 152 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 123 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பந்துவீச்சில் மேட் ஹென்றி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மிகப் பெரிய ரன்ரேட்டில் வெற்றி பெற்ற நியூசிலாந்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான தங்கள் முதல் போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது நெதர்லாந்து. 286 ரன்களை சேஸ் செய்த அந்த அணி 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய பாஸ் டி லீட், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு 67 ரன்கள் எடுத்தார்.
நெதர்லாந்து அணி தங்கள் முதல் போட்டியை இந்த மைதானத்தில் தான் விளையாடியது. ஆரம்பத்தில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது இம்மைதானம். 9.1 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான். இருந்தாலும் போகப் போக வழக்கமான ஹைதராபாத் ஆடுகளம் போல் பேட்டிங்குக்கு தோதாக இருந்தது. இந்தப் போட்டியில் நிச்சயம் நல்ல ஸ்கோரை எதிர்பார்க்கலாம்.
நியூசிலாந்து: டெவன் கான்வே - இந்திய ஆடுகளங்கள் என்றாலே வெறித்தனமாக விளையாடுகிறா டெவன் கான்வே. முதல் போட்டியில் 152 ரன்கள் விளாசிய அவர், மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ஹைதராபாத் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்தப் போட்டியிலும் அதேபோல் ஒரு மிகப் பெரிய இன்னிங்ஸை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். நெதர்லாந்து அணி ஸ்பின்னை வைத்து இன்னிங்ஸைத் தொடங்கினாலும், அவர் மிகச் சிறப்பாக ஸ்பின்னை கையாளக்கூடியவர் என்பதால் நிச்சயம் ஒரு மிகச் சிறந்த தொடக்கம் கிடைக்கும்.
பாஸ் டி லீட் - நிச்சயம் அந்த அணியின் சூப்பர் ஸ்டாரைத் தாண்டி இன்னொரு வீரரை நினைத்துப் பார்க்க முடியாது. நியூசிலாந்து அணிக்கு இரண்டு இன்னிங்ஸிலுமே சவால் கொடுக்க கூடியவர் இன்னொரு அரைசதம் அடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியனையே ஒட்டுமொத்தமாகப் புரட்டி எடுத்த நியூசிலாந்து நிச்சயம் நெதர்லாந்துக்கு எதிராக எளியில் வெற்றி பெறவேண்டும். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 8 ஆண்டுகள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடியவர் என்பதால், நிச்சயம் இந்தப் போட்டியில் ரசிகர்கள் ஆதரவும் அந்த அணிக்கு அதிகம் இருக்கும்.