கங்குலி, தோனி, கோலி-க்கு பின் கில்? நால்வரையும் இணைக்கும் மையப்புள்ளி! கோப்பையுடன் திரும்புமா IND?
கங்குலி, தோனி, கோலி, கில்.. 4 பேரையும் சேர்க்கும் மையப்புள்ளி!
இன்றைய கால கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 அணி இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்ற கேள்வி எழுப்பப்பட்டால் பெரும்பாலான கிரிக்கெட் ஜாம்பவான்கள் இந்தியாவின் பெயரையே கூறுவார்கள். அப்படி ஒரு அசுர வளர்ச்சியை உலக அளவில் கட்டமைப்பாலும், திறமைகளாலும் கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட்.
ஒரு காலத்தில் அழியும் நிலையில் இருந்த இந்திய கிரிக்கெட்டை காப்பாற்றிய பெருமை கங்குலி என்ற கேப்டனுக்கே சேரும், இந்திய கிரிக்கெட்டை காப்பாற்றியவர் கங்குலி என்றால், அதை வளர்த்தெடுத்தது மட்டுமில்லாமல் 2 தசாப்தங்களாக கோப்பைக்காக ஏங்கி கொண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு 3 ஐசிசி கோப்பைகளை வென்றுகொடுத்து வலுவான அணியாக உருவாக்கிய பெருமை தோனி என்ற கேப்டனுக்கே சேரும். இவர்கள் இருவர்கள் தாண்டி வெளிநாட்டு மண்ணிலும் இந்தியாவால் தொடர்களை வெல்ல முடியும், உலக கிரிக்கெட்டையே ஆண்ட ஆஸ்திரேலியாவை கூட ஒரு தசாப்தமாக அடக்கி ஆள முடியும் என இந்திய கிரிக்கெட்டில் புதுமையை புகுத்திய பெருமை கோலி என்ற கேப்டனுக்கே சேரும்.
இந்த 3 கேப்டன்களிடமும் இருந்த ஒரே சூட்சமம் தான், அவர்களின் வெற்றிக்கான அடித்தளமாக இருந்துள்ளது. கரணம் தப்பினால் மரணம் என்ற கடினமான காலகட்டங்களில் இந்திய அணியின் கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட கங்குலி, தோனி, கோலி 3 பேரும் சவாலை ஏற்றுக்கொண்டது மட்டுமில்லாமல், அதை சரித்திரமாக மாற்றும் ஒரு ஆற்றலையும் கொண்டிருந்தனர்.
இந்த 3 வெற்றி கேப்டன்களின் வழியிலேயே சுப்மன் கில், இந்திய அணியின் மற்றுமொரு கடினமான சூழலில் கேப்டன்சி பொறுப்பை கையில் எடுத்துள்ளார். இதற்கு முன் இதுபோலான சூழலில் சவாலை ஏற்றுக்கொண்ட கங்குலி, தோனி, கோலி வரிசையில் சுப்மன் கில்லும் வெற்றியை தன்வசப்படுத்த வேண்டுமானால் 3 முக்கியமான விசயங்களை சரிசெய்தே ஆகவேண்டும்.
கடைசி 8 போட்டிகளில் 6 தோல்வி, சொந்த மண்ணில் வரலாற்று தோல்வி, பார்டர் கவாஸ்கர் டிராபியை இழந்தது என்பதையெல்லாம் கடந்து, இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் தூணாக இருந்த விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரோகித் சர்மா மூவரையும் இழந்திருப்பது, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சுப்மன் கில் என்ற இளம் கேப்டனுக்கு மிகப்பெரிய சவாலையே கொடுக்கப்போகிறது. இத்தகைய மாபெரும் சவாலை கடந்து தொடரை வென்று வரலாறு படைக்க வேண்டுமென்றால், 3 விசயங்களை சரிசெய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சுப்மன் கில்.
முதல் விசயம்..
முதலில் இந்திய அணியின் பந்துவீச்சு கவலையை சுப்மன் கில் களைய வேண்டும். அதற்கு பும்ராவை 3 போட்டிகளில் மட்டுமில்லாமல் 5 போட்டிகளிலும் விளையாட வைக்கும் ஒரு யுக்தியை சுப்மன் கில் கையில் எடுக்கவேண்டும். பும்ரா 5 போட்டியிலும் விளையாட வேண்டுமென்றால் அவரின் பொறுப்பை மற்ற பவுலர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எதிரணியின் முக்கியமான வீர்ர்களை வீழ்த்தும் பொறுப்பு பும்ராவிடம் இருக்கிறது என்றால், மற்ற பவுலர்கள் ஒன்று பந்துவீச்சை டைட்டாக வீசி அழுத்தம் சேர்க்க வேண்டும் அல்லது மற்ற பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும்.
வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் நல்ல ஃபார்மில் இருக்கும் பிரசித் கிருஷ்ணா மற்றும் இடது கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இருவரும் அணியில் இடம்பிடிக்க வேண்டும். மாறாக 2025 ஐபிஎல் தொடரில் நெருப்பாக பந்துவீசிய முகமது சிராஜ், அதே Fire-ஐ இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் காண்பித்துவிட்டால் இந்திய அணி இங்கிலாந்து மண்ணிலும் வரலாற்று சம்பவத்தை நிச்சயம் செய்யும்.
இரண்டாவது விசயம்..
சரிசெய்ய வேண்டிய இரண்டாவது விசயம் நம்பர் 3 பேட்டர் மற்றும் நம்பர் 4 பேட்டர்களாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையான வீரர்களை தேர்வுசெய்வது. தொடக்க வீரராக விளையாடி வந்த சுப்மன் கில், தன்னை விராட் கோலி விளையாடிவந்த நம்பர் 4 பேட்ஸ்மேனாக தகவமைத்து கொள்ள வேண்டும். நம்பர் 3-ல் கேஎல் ராகுல், நம்பர் 5-ல் கருண் நாயர் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை நிலையான வீரர்களாக அமைத்துக்கொண்டு, தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சனை களமிறக்கினால் இந்தியாவின் டாப் 5 பேட்டிங் ஆர்டர் வலுவானதாக அமையும்.
அல்லது கில் தொடக்க வீரராகவே விளையாடினால் டாப் 5 பேட்டிங் ஆர்டரை அதற்கேற்ப சரியான கலவையாக கொடுக்க வேண்டும். இந்த கவலை நீங்கிவிட்டாலே இளம் இந்திய அணி இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சை சமாளித்துவிடுவார்கள் என்ற கவலை நீங்கிவிடும்.
மூன்றாவது விசயம்..
சரிசெய்ய வேண்டிய 3வது விசயம் இறுதி டெஸ்ட் தொடர்களில் ரோகித் சர்மா கேப்டனாக ரன்களை அடிக்காதது ஒட்டுமொத்தமாக இந்திய அணியை பாதித்தது. ஒரு கேப்டன் அணிக்கான ஆற்றலை வழங்க வேண்டுமென்றால் கேப்டன்சியுடன் சேர்த்து கேப்டனின் பேட்டில் இருந்தும் அதிக ரன்கள் வர வேண்டும். ஒரு கேப்டன் நல்ல நம்பர்களை எடுத்துவந்தால், அது அணியின் ஆற்றலையும் பாசிட்டிவாக மாற்றும். அதனை ரோகித் சர்மா விசயத்திலேயே நாம் பார்த்துவிட்டோம். அதனால் விராட் கோலியை போன்ற கேப்டன்சியுடன் சேர்த்து ரன்களையும் சுப்மன் கில் குவிக்க வேண்டும்.
அதனுடன் சேர்த்து எந்த நிலைமையில் இருந்துவேண்டுமானாலும் வெற்றிபெற முடியும் என்ற கொள்கை கொண்டிருந்த கங்குலி, தோனி, கோலியின் வழித்தடங்களை சுப்மன் கில்லும் பின்பற்ற வேண்டும். அந்த பாசிட்டிவிட்டி தான் கேப்டனாக சுப்மன் கில்லை வெற்றியடைய உத்வேகம் கொடுக்கும்.
18 வருடத்திற்கு பிறகு சாதனை படைக்குமா இந்தியா?
18 முறை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 1971, 1986, 2007 என 3 முறை மட்டுமே வென்றுள்ளது. அதில் 4 முறை இங்கிலாந்து அணியால் ஒயிட் வாஷ் செய்யப்பட்டுள்ளது இந்தியா. அதிலும் பென் ஸ்டோக்ஸ்-மெக்கல்லம் கூட்டணியின் ’பாஸ்பால்’ உருவெடுத்த பிறகு 2022 முதல் ஒரு தொடரை கூட சொந்த மண்ணில் இங்கிலாந்து இழக்கவில்லை, அதில் முக்கியமாக விளையாடிய அல்மோஸ்ட் போட்டிகளை இங்கிலாந்து சொந்த மண்ணில் வென்று சாதித்துள்ளது. ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் இருவரும் அணிக்காக அதிக ரன்களையும், சதங்களையும் குவித்த வீர்ர்களாக அச்சுறுத்தியுள்ளனர்.
இவ்வளவு சவால்களையும் கடந்து சுப்மன் கில்லின் இளம் படை இங்கிலாந்து மண்ணில் தொடரை வென்றுவிட்டால், அது இந்திய கிரிக்கெட்டின் பொற்காலமாகவே பார்க்கப்படும். வரலாறு படைக்குமா இந்தியா? இளம் இந்திய அணிக்கும், இளம் கேப்டன் சுப்மன் கில்லுக்கும் வாழ்த்துக்கள்!