27 வருட கோப்பை கனவு | இங்கிலாந்து மண்ணில் 16 சதங்கள்.. தென்னாப்ரிக்காவை காப்பாற்றுவாரா பெடிங்காம்?
200 வருடங்களுக்கு முன்பே கிரிக்கெட் ஊன்றிய பழமையான கிரிக்கெட் அணியாக இருந்தாலும், கோப்பை என்பது தென்னாப்பிரிக்காவிற்கு இதுவரை எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது.
கிரிக்கெட் வரலாற்றில் 20 வருடங்கள் தடைக்குபிறகு 1991-ல் சர்வதேச கிரிக்கெட்டில் மறுமலர்ச்சியை பெற்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 1998-ம் ஆண்டுநடைபெற்ற ஐசிசி நாக் அவுட் கோப்பை வென்றது. அதுதான் அவ்வணி வென்ற கடைசி மற்றும் ஒரே கோப்பையாக இன்றளவும் இருந்துவருகிறது.
அதற்குபிறகு பல உலகக்கோப்பைகளை வெல்ல போராடிய அந்த அணி, 1992, 2003, 2015 உலகக்கோப்பை தொடர்களில் நாக் அவுட் போட்டிவரை முன்னேறி தோற்றது. அதனைத்தொடர்ந்து 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிவரை முன்னேறிய தென்னாப்பிரிக்கா, இந்தியாவிடம் 30 பந்துகளில் 30 ரன்கள் அடிக்கமுடியாமல் தோற்று கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இப்படி கையிலிருக்கும் போட்டிகளை எல்லாம் கோட்டைவிட்டு ‘சோக்கர்ஸ் அணி’ என பெயரை சுமந்துவரும் தென்னாப்பிரிக்கா, மற்றொரு ஐசிசி கோப்பை வெல்லும் வாய்ப்பாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விளையாடிவருகிறது.
2025 WTC Final.. போராடிவரும் தென்னாப்பிரிக்கா!
27 வருட கோப்பை கனவை நிறைவேற்றும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடுவருகிறது தென்னாப்பிரிக்கா.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் இருவரின் அரைசதத்தின் உதவியால் 212 ரன்கள் சேர்த்தது.
அதற்குபிறகு முதல் இன்னிங்ஸில் விளையாடிவரும் தென்னாப்பிரிக்கா அணி 135 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து போராடிவருகிறது. தென்னாப்பிரிக்காவிற்கு இருக்கும் ஒரே நம்பிக்கையாக டேவிட் பெடிங்காம் 45* ரன்களுடன் விளையாடிவருகிறார்.
தென்னாப்பிரிக்காவை காப்பாற்றுவாரா பெர்மிங்காம்?
தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், கேப்டன் டெம்பா பவுமா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை கொடுத்தார். ஆனால் அவரை 36 ரன்னில் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் தென்னாப்பிரிக்கா ரசிகர்களின் இதயத்தை உடைத்தார்.
பவுமா சென்றதற்கு பிறகு ஒரே நம்பிக்கையாக களத்தில் நின்று விளையாடிவருகிறார் டேவிட் பெடிங்காம். இவர் முதல்தர கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் 57 சராசரியுடன் 16 சதங்கள் அடித்துள்ளார். மற்ற நாடுகளில் அவருடைய சராசரி 50-க்கும் குறைவாகவே இருந்துள்ளது.
அதேபோல 2024 இங்கிலாந்து கவுண்டி தொடரில் 6 சதங்கள் குவித்த பெடிங்காம், கவுண்டி தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.
135 ரன்களில் 7 விக்கெட்டை இழந்திருக்கும் தென்னாப்பிரிக்காவை காப்பாற்றுவாரா பெடிங்காம் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.