சாம்பியன்ஸ் டிராபி இடத்தை உறுதி செய்யுமா வங்கதேசம்... ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முக்கிய மோதல்..!

வங்கதேச அணி அரையிறுதி போட்டியில் இல்லாவிட்டாலும் டாப் 8 இடங்களுக்குள் முடித்தால் மட்டுமே 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னேற முடியும். அதனால் இந்தப் போட்டி அவர்களுக்கு மிகவும் முக்கியம்.
Mushfiqur Rahim
Mushfiqur RahimShashank Parade
போட்டி 43: ஆஸ்திரேலியா vs வங்கதேசம்
மைதானம்: மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், புனே
போட்டி தொடங்கும் நேரம்: நவம்பர் 11, காலை 10.30 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

ஆஸ்திரேலியா
போட்டிகள் - 8, வெற்றிகள் - 6, தோல்விகள் - 2, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 12
புள்ளிப் பட்டியலில் இடம்: மூன்றாவது
சிறந்த பேட்ஸ்மேன்: டேவிட் வார்னர் - 412 ரன்கள்
சிறந்த பௌலர்: ஆடம் ஜாம்பா - 20 விக்கெட்டுகள்
இரண்டு தோல்விகளோடு உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா தொடங்கியபோது அந்த அணி அரையிறுதிக்குள் நுழையாது என்று பலரும் கருதினர். ஆனால் தொடர்ந்து 6 போட்டிகளை வென்று தங்கள் திறனை நிரூபித்திருக்கிறது ஐந்து முறை சாம்பியன். அதிலும் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேக்ஸ்வெல்லின் மிரட்டல் ஆட்டத்தால் தோல்வியைத் தவிர்த்து அரையிறுதியை உறுதி செய்தது ஆஸ்திரேலியா.

டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்Kunal Patil

வங்கதேசம்
போட்டிகள் - 8, வெற்றிகள் - 2, தோல்விகள் - 6, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 4
புள்ளிப் பட்டியலில் இடம்: எட்டாவது
சிறந்த பேட்ஸ்மேன்: மஹமதுல்லா - 296 ரன்கள்
சிறந்த பௌலர்: மெஹதி ஹசன் மிராஜ் - 10 விக்கெட்டுகள்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பின் வங்கதேச அணிக்கு எதுவுமே சரியாகப் போகவில்லை. தொடர்ந்து 6 போட்டிகளில் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இருந்தாலும் முந்தைய போட்டியில் இலங்கையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்புகளை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

மைதானம் எப்படி?

இந்த உலகக் கோப்பையில் இதுவரை 4 போட்டிகள் புனேவில் நடைபெற்றிருக்கின்றன. முதலிரு போட்டிகளிலும் சேஸ் செய்த அணிகள் வெற்றிபெற்றன. அடுத்த இரு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகள் பெரிய ஸ்கோர் அடித்து. பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றன. வங்கதேச அணி இங்கு விளையாடிய போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது. இந்தப் போட்டியிலும் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கு ஓய்வு, யாருக்கு வாய்ப்பு?

ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டதால் ரிலாக்ஸாக விளையாடும். இந்தப் போட்டியின் முடிவு எந்த வகையிலும் அவர்களுக்கு தாக்கம் ஏற்படுத்தப்போவதில்லை. வென்றாலும் தோற்றாலும் அவர்கள் தென்னாப்பிரிக்காவுடன் தான் அரையிறுதியில் ஆடப்போகிறார்கள். எனவே இந்தப் போட்டியில் ஒருசில முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம். கடந்த போட்டியில் கடும் தசைப்பிடிப்புக்கு நடுவே விளையாடி இரட்டை சதமடித்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெறவைத்த கிளென் மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம். அவருக்குப் பதில் கடந்த போட்டியில் விளையாடாத ஸ்டீவ் ஸ்மித் பிளேயிங் லெவனுக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. பந்துவீச்சிலும் ஸ்டார்க் அல்லது ஹேசில்வுட் இருவரில் ஒருவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு ஷான் அபாட் களமிறங்கலாம். விக்கெட் கீப்பர் ஜாஷ் இங்லிஸ் இதுவரை பெரிய தாக்கம் ஏற்படுத்தாத காரணத்தால் அலெக்ஸ் கேரி இன்னொரு வாய்ப்பு பெறுவதற்கும் வாய்ப்புண்டு.

ஷகிப் இல்லாமல் வெற்றி பெறுமா வங்கதேசம்?

வங்கதேச அணி அரையிறுதி போட்டியில் இல்லாவிட்டாலும் டாப் 8 இடங்களுக்குள் முடித்தால் மட்டுமே 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னேற முடியும். அதனால் இந்தப் போட்டி அவர்களுக்கு மிகவும் முக்கியம். கடைசிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக பேட்டிங், பௌலிங் இரண்டிலும் ஓரளவு நன்றாக செயல்பட்ட்டு வெற்றிப் பாதைக்குத் திரும்பியது. ஆனாலும் இந்தப் போட்டியில் அவர்கள் கேப்டன் ஷகிப் அல் ஹசன் இல்லாமல் விளையாடவேண்டும். காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகியிருக்கிறார் ஷகிப். அதனால் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ கேப்டனாக செயல்படுவார்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:

ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர்: இந்தத் தொடரில் ரன் மழையாகப் பொழிந்துகொண்டிருந்த டேவிட் வார்னர், கடந்த 2 போட்டிகளிலும் சேர்த்தே 33 ரன்களே எடுத்திருக்கிறார். அதனால் இந்தப் போட்டியின் மூலம் நிச்சயம் அவர் ஃபார்முக்கு வர முயற்சி செய்வார்.

வங்கதேசம் - மெஹதி ஹசன் மிராஜ்: இந்தத் தொடரில் எதிர்பார்த்த அளவுக்கான தாக்கத்தை ஏற்படுத்தவில்லையென்றாலும், ஷகிப் இல்லாத இந்த நேரத்தில் நிச்சயம் அவரிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com