\
Why Was Rajeshwari Gayakwad Dropped from India Team?
ராஜேஸ்வரி கெய்க்வாட்BCCI

ODI-ல் 99 விக்கெட்.. ஆனாலும் புறக்கணிப்பா? - ராஜேஸ்வரி கெய்க்வாட் வேதனை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தனக்கும் மீண்டும் இடம் கிடைக்காதது ஏன் எனவும் இதற்கான காரணத்தைக் கூற வேண்டும் எனவும் மூத்த வீராங்கனை ராஜேஸ்வரி கெய்க்வாட் கேள்வி எழுப்பியுள்ளார்.
Published on: 

இந்திய அணிக்காக 2014ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் கர்நாடகாவைச் சேர்ந்த ராஜேஸ்வரி கெய்க்வாட். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், இதுவரை 64 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும், 58 டி20 போட்டிகளில் 61 விக்கெட்டுகளையும், 5 டெஸ்ட் போட்டிகளில் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ராஜேஸ்வரி கெய்க்வாட்
ராஜேஸ்வரி கெய்க்வாட்X

கடந்த 2024ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது இவருக்குக் கடுமையான முழங்கால் காயம் ஏற்பட்டது. இதனால், சுமார் 6 மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியிருந்தார். காயத்திலிருந்து மீண்ட பிறகு, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கும் நோக்கில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இருப்பினும், இந்திய அணியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய ராஜேஸ்வரி, " நான் ஒருநாள் கிரிக்கெட்டில் 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். உலகக் கோப்பைக்குப் பிறகு காயமடைந்த பல வீராங்கனைகள் மீண்டும் அணிக்குத் திரும்புகின்றனர். மேலும், மற்றவர்களுக்கு 100 விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஆனால், எனக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்திய அணியில் இடம் கிடைக்காததற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பயிற்சியாளரைத் தொடர்புகொள்ள முயன்றதாகவும், ஆனால் தனது தொலைபேசி அழைப்புகளுக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

99 ஒருநாள் விக்கெட்டுகளுடன் இருக்கும் ராஜேஸ்வரி, தனது 100ஆவது விக்கெட்டை எட்டுவதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நிலையில், அணித் தேர்வில் தனக்கு இழைக்கப்பட்டதாகக் கருதும் புறக்கணிப்பு குறித்து வெளிப்படையாகப் பேசியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Why Was Rajeshwari Gayakwad Dropped from India Team?
’லைன் & லெந்தில் புலி..’ ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள்! ஹர்ஷ் துபே மிரட்டல்!