தோனி மீது ஹர்பஜன் சிங்கிற்கு ஏன் இவ்வளவு கோபம்? அது ரசிகர்களின் கருத்து தானே; 2007 WC காரணமா?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் சக வீரர் ஹர்பஜன் சிங் இடையே ஏற்பட்டிருக்கும் மோதலுக்கு என்ன காரணம் என்பது குறித்து இக்கட்டுரையில் அறிவோம்.
ஹர்பஜன் சிங், தோனி
ஹர்பஜன் சிங், தோனிfile image

சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதிலும், கேப்டனாக முந்தையை ஐசிசி இறுதிப்போட்டிகளில் தோனி செயல்பட்ட விதம் குறித்து ரசிகர்கள் பலரும் எடுத்துரைத்திருந்தனர். இதற்கு தோனி காலத்தில் அவருடன் விளையாடிய வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் கௌதம் காம்பீர் ஆகியோரும் விமர்சனம் செய்து பதிலளித்து இருந்தனர்.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்file image

குறிப்பாக, ஹர்பஜன் சிங் ரசிகர் ஒருவரின் ட்விட் பதிவை டேக் செய்து மிகவும் காட்டமாகவே பதிலளித்து இருந்தார். அதாவது, அவர் அளித்திருந்த பதிவில், “இந்தியாவிலிருந்து இந்த இளம் வீரர் தன்னந்தனியாக சென்று ஆடிதான் உலகக்கோப்பையை வென்றார்... அணியிலிருந்த மற்ற 10 வீரர்களும் ஆடவே இல்லை... அவர் மட்டுமே தன்னந்தனியாக எல்லா கோப்பைகளையும் வென்றார்.

இதில் முரண் என்னவென்றால் ஆஸ்திரேலிய அல்லது வேறு நாடுகள் உலகக் கோப்பை வெல்லும்போது அந்த அணி அல்லது நாடு வென்றது என்று தலைப்புச் செய்தி வருகிறது. அதுவே, இந்திய அணி வெல்லும்போது கேப்டன் வென்றார் என்று வருகிறது. கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. குழுவாகத்தான் வெற்றி தோல்விகளை அடைய முடியும்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அதற்குப் பதிலடியாக ரசிகர்கள், தோனி வெற்றி குறித்த போட்டிகள் பற்றிய புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியலைப் பதிவிட்டு ஹர்பஜன் சிங்கிற்கு எதிராகக் கணடனப் பதிவுகளைப் பதிவு செய்தனர். இந்த நிலையில், மீண்டும் ஹர்பஜன் சிங், தோனி கேப்டனாய் இருந்த போட்டிகளில், மற்ற வீரர்களின் பங்களிப்பையும் எடுத்துக் காட்டி, தோனியே மட்டுமே வெற்றிக்குக் காரணம் அல்ல என்கிற தோனியில் மீண்டும் ஒரு பதிவைச் செய்துள்ளார்.

MS Dhoni
MS DhoniPTI

இதற்கு ரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தவிர, தோனி ரசிகர்கள் அவர் மீதிருக்கும் ஆர்வத்தில் இப்படியான பதிவுகளைப் போடுவர். எல்லா ரசிகர்களுமே அவருக்குப் பிடித்த வீரர்கள் பதிவுகளையும் புள்ளி விவரங்களையும் பதிவிடுவதில் ஆர்வம் காட்டுவர். அந்த வகையில்தான் தோனியின் ரசிகர்கள் இதைச் செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி, தோனி எப்போதும் வெற்றிபெற்ற பின் கோப்பையை சக வீரர்களிடம் கொடுத்துத்தான் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றின்போது தோனியே விளக்கம் அளித்துள்ளார். அதாவது, தாம் கோப்பையுடன் சகவீரர்களுடன் இருப்பதில்லை என்பதற்கு விளக்கம் அளித்திருப்பார். அதாவது வெற்றி என்பது எல்லோருடைய உழைப்பில் கிடைக்கக் கூடிய ஒன்று; வெற்றியை கோப்பை உடன் கொண்டாடவே ஒவ்வொரு வீரரும் நினைப்பார்கள் என்று மிக அழகாக கூறியிருந்தார்.

ஏன், சமீபத்தில் 5வது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியபோதுகூட போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற அம்பத்தி ராயுடுவிடம்தான் முதலில் கோப்பை வழங்கப்பட்டது. அடுத்து ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. ஆக, அவர் ஒரு கேப்டனாய் மட்டுமின்றி, அணி வீரர்களுடன் சகஜமாகவே பழகி வருகிறார். சில நேரங்களில் எதிர் அணி வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உள்ளார். இதற்கான உதாரணங்களை சமீபத்திய ஐபிஎல் போட்டிகளில் கண்டிருக்கலாம்.

அம்பத்தி ராயுடு,
அம்பத்தி ராயுடு, ட்விட்டர்

மேலும், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் கேப்டன் பதவியேற்று தோனியின் சொந்த மைதானத்தில் விளையாடச் சென்றபோதுகூட அவர் ஆலோசனைகள் வழங்கி உள்ளார். ஆக, அவர் எப்போதுமே தாம் மட்டும்தான், தன்னால்தான் அனைத்தும் நிகழ்ந்தது என நினைத்துக் கொள்வதில்லை. இதை, நீங்களே (ஹர்பஜன் சிங்) நன்கு அறிந்திருப்பீர்கள். அவருடன் சர்வதேச போட்டிகளில் மட்டுமின்றி, சென்னை அணியிலும் ஆடியுள்ளீர்கள். அப்படி இருக்கையில், சாதாரணமாக ரசிகர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு எல்லாம் ஏன் இப்படிப் பதிவு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

கேப்டன் என்பவருக்கு போட்டியைப் பொறுத்தவரை கூடுதல் சுமை இருக்கும். வெற்றியோ, தோல்வியோ எதுவென்றாலும் அவர்தான் முதலில் சொல்ல வேண்டியிருக்கும்; பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி களத்திலும் ஒவ்வொரு தரப்பையும் கண்காணித்து தீவிரமாகச் செயல்பட வேண்டியுள்ளது.

அதேநேரத்தில், தோனி மீது ஹர்பஜன் சிங் கடுமையான விமர்சனம் வைப்பதற்கு 2007ஆம் தோனி வென்று தந்த டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிதான் என்கின்றனர், கிரிக்கெட் வல்லுநர்கள். அந்தப் போட்டியில் அனுபவம் வாய்ந்த கடைசி ஓவரை ஹர்பஜன் சிங்கிற்கு வழங்காமல் ஜோகிந்தர் சிங்கிற்கு வழங்கி இருந்தார், தோனி.

ஹர்பஜன் சிங், தோனி
ஹர்பஜன் சிங், தோனிtwitter page

இதுகுறித்து கேள்வியின்போது பதிலளித்த தோனி, ”யார்க்கர்களை வீசுவதில் ஹர்பஜன் சிங் கைதேர்ந்தவர் அல்ல. ஆகவே, அவர் வெற்றி தேடித் தருவார் என்பதில் 100% உறுதியில்லை. 100 சதவீதம் உறுதியில்லாத ஒருவரை பந்து வீச அழைப்பதைக் காட்டிலும், சர்வதேச அளவில் அதைச் செய்ய சிறப்பாக முயற்சி செய்யும் ஒருவரை பயன்படுத்தலாம் என்று கருதினேன். இந்தப் போட்டியில் தோற்றிருந்தாலும்கூட, அது என்னை எந்த வகையிலும் பாதிக்காது. ஜோகிந்தர் சிங் பந்து வீசிய விதம் மிகச் சிறப்பாக இருந்ததாகக் கருதுகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

இதை மையமாக வைத்துத்தான் ஹர்பஜன் சிங், தோனிக்கு எதிராகக் கடுமையாகப் பதிவுகளை வெளியிட்டு வருகிறார் என்கின்றனர், அவர்கள். அதேநேரத்தில், அந்த விரிசலுக்கு இருவரும் இதுவரை பதில் சொல்லவில்லை என்பதும், அதற்குப் பிறகு தோனி தலைமையிலான சென்னை ஐபிஎல் அணியில் ஹர்பஜன் விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com