தோனிக்கு பிறகு இந்திய அணி 10 ஆண்டுகளாக ஐசிசி தொடர்களை வெல்ல முடியாததற்கு என்ன காரணம் - ஓர் அலசல்!

இன்னும் 3 மாதங்களில் இந்தியாவில் 50 ஒவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி ஐ.சி.சி. தொடர்களை வெல்ல முடியாததற்கு காரணம் என்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
Indian Team
Indian TeamTwitter

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக தோல்வி அடைந்தது முதல் தற்போது வரை இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக ரசிகர்கள் எழுதி வந்த வேளையில், தற்போது உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியாகி உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கை பொறுத்தவரை யாராலும் நெருங்க முடியாத அளவிற்கு அசுர பலமாக பிசிசிஐ உள்ளது. இந்திய அணியும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான தொடர்களில் தோல்வியே அடையாமல் வெற்றி பெற்று வந்தாலும், கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற ஐ.சி.சி கோப்பை தொடர்களில் ஒன்றை கூட வெல்ல முடியாமல் தவித்து வருகின்றது.

ஐபிஎல் தொடர் மூலம் பல இளம் நட்சத்திர வீரர்களை வைத்து இருந்தாலும் இந்திய அணி உலகக் கோப்பை தொடரை வெல்ல முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதில் ஒரு ஒழுங்குமுறை இல்லாமல் இருப்பது முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

இந்திய அணிக்காக ஐ.சி.சி. தொடர்களை வென்று தந்த தோனி அணியின் கேப்டனாக இருந்த நேரத்தில் அதிகபட்சம் 17 வீரர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்தியா 2 அணிகளை வைத்து விளையாடி வருகிறது. வீரர்கள் அதிகமாக உள்ளதால், இப்படி விளையாடி வருகிறார்கள் என பலர் பார்த்தாலும், இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஓய்விற்கு பிறகு யார் அணியின் நான்காம் நிலை பேட்ஸ்மேன் என்பதையே நிர்ணயம் செய்யாமல் தவித்து வருகிறது இந்திய அணி.

2017, 2019, 2021 ஆம் ஆண்டு ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோல்விக்கு பேட்டிங் முக்கிய காரணமாக இருந்து வரும் நிலையில், தற்போது வரை இந்திய அணியின் நான்காவது பேட்ஸ்மேன் யார், அணிக்கான விக்கெட் கீப்பர் யார் என்பதில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வருகிறது. ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் நான்காவது பேட்ஸ்மேனாக நன்றாக விளையாடி வந்த நேரத்தில், தற்போது அவர்கள் இருவரும் காயத்தில் அவதிபட்டு வரும் நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு அவர்களை முழுமையாக தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.

உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுவதால் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இந்திய அணிக்கான ஸ்பின்னர்கள் யார் என்ற கேள்விக்கும் தற்போது வரை பிசிசிஐ பதில் தெரியாமல் தவித்து வருகின்றனர். அஷ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல், சாஹல், குல்தீப் யாதவ், பிஷ்னாய் என பல உலக தரம் வாய்ந்த ஸ்பின்னர்களை கையில் வைத்துள்ள இந்திய அணி, உலக கோப்பை வெல்ல இவர்களை நம்பலாம் என மூன்று வீரர்களை முடிவு செய்து, அடுத்த 4 மாதங்களுக்கு தொடர்ச்சியாக அவர்களை பயன்படுத்த வேண்டும் என்பது கிரிக்கெட் விமர்சகர்கள் பார்வையாக உள்ளது.

உலகக் கோப்பையை நிச்சயம் வெல்வதற்கான பலம் இந்திய அணியிடம் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் வீரர்களை தேர்வு செய்வதிலும் எந்த முறையில் விளையாட வேண்டும் என்பதை குழப்பமாகவே உள்ள இவர்கள், ஒரு முடிவை தற்போதே எடுத்து அதனை பின்பற்றினால் இந்திய அணி கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.

- சந்தானக்குமார், செய்தியாளர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com