senuran muthusamy
senuran muthusamyweb

’WTC ஃபைனலில் ஒரு தமிழர்..’ யார் இந்த சேனுரான் முத்துசாமி? முதல் சர்வதேச விக்கெட் விராட் கோலி!

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தமிழக வம்சாவளியை சேர்ந்த சேனுரான் முத்துசாமி என்பவர் தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பெற்று விளையாடவிருக்கிறார்.
Published on

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியானது தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஜுன் 11 முதல் 15-ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது.

மிகப்பெரிய இறுதிப்போட்டிக்கு தயாராக இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், இரண்டு அணிகளும் அவர்களுடைய இறுதிப்போட்டிக்கான ஸ்குவாடை அறிவித்துள்ளன.

தென்னாப்பிரிக்கா அறிவித்திருக்கும் 2025 WTC ஃபைனலுக்கான அணித்தேர்வில், தமிழக வம்சாவளியைச் சேர்ந்த சேனுரான் முத்துசாமி என்ற சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரும் இடம்பிடித்துள்ளார்.

2025 WTC ஃபைனல் தென்னாப்பிரிக்கா ஸ்குவாட்: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ யான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், லுங்கி இன்கிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், சேனுரன் முத்துசாமி, டேன் படர்சன்.

2025 WTC ஃபைனல் ஆஸ்திரேலியா ஸ்குவாட்: கம்மின்ஸ் (கேப்டன்), போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஹசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மேட் குஹ்னேமன், லபுசனே, நாதன் லயன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.

யார் இந்த சேனுரான் முத்துசாமி?

தென்னாப்பிரிக்காவின் இறுதிப்போட்டிக்கான அணியில் இடம்பிடித்திருக்கும் இடது கை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான சேனுரான் முத்துசாமி, தென்னாப்பிரிக்காவில் பிறந்திருந்தாலும் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்.

31 வயதாகும் சேனுரானின் குடும்பம் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் சேனுரான் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர், இருப்பினும் அவர் இரண்டு முறை தமிழகத்திற்கு வருகைபுரிந்து தனது தொலைதூர உறவினர்களைச் சந்தித்துள்ளார். அவர்கள் இன்னும் நாகப்பட்டினத்தில் வசித்துவருகின்றனர்.

senuran muthusamy
senuran muthusamy

2013 முதல் தென்னாப்பிரிக்காவிற்காக முதல் தர கிரிக்கெட்டை விளையாடிவரும் சேனுரான், பந்துவீச்சில் 262 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 9 சதங்களுடன் 30 அரைசதங்களையும் அடித்து 5111 ரன்களை குவித்துள்ளார்.

தன்னுடைய அபாரமான ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்திய சேனுரான் முத்துசாமிக்கு 2019-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சர்வதேச அறிமுகம் கிடைத்தது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற சேனுரான், தன்னுடைய முதல் விக்கெட்டாக விராட் கோலியை வெளியேற்றி சிறந்த தொடக்கத்தை பெற்றார்.

senuran celebrating virat kohli wicket
senuran celebrating virat kohli wicket

அதற்குபிறகு தென்னாப்பிரிக்கா அணியில் பெரிதாக இடம்பிடிக்காத சேனுரான், சமீபத்திய தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் சிறப்பான பங்களிப்பை கொடுத்ததன் மூலம் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இடம்பிடித்துள்ளார்.

மிகப்பெரிய இறுதிப்போட்டியில் இடம்பிடித்ததன் மூலம் கவனம்பெற்றுள்ளார் சேனுரான் முத்துசாமி. தென்னாப்பிரிக்காவின் மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான கேசவ் மகாராஜ்ஜுன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேசவ் மஹாராஜ்
கேசவ் மஹாராஜ்web

1998-ல் நடைபெற்ற ஐசிசி நாக்அவுட் டிரோபியை வென்றதற்குபிறகு 27 வருடங்களாக கோப்பையே வெல்லாமல் இருந்துவரும் தென்னாப்பிரிக்கா அணி, WTC இறுதிப்போட்டியை வெல்லவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருக்கின்றனர். என்ன நடக்கப்போகிறது, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சேனுரான்முத்துசாமி எப்படி உதவ போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com