எப்போது கூடுதல் பௌலரோடு களமிறங்கும் இந்திய அணி?

கடந்த சில ஆண்டுகளாக அனைத்து இந்திய அணி கேப்டன்களுமே இதைத்தான் செய்துவருகிறார்கள். 5 பௌலிங் ஆப்ஷன்களோடு மட்டுமே களமிறங்குகிறார்கள்.
 Axar Patel
Axar Patel Swapan Mahapatra

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது சர்வதேச டி20 போட்டியில் கடைசிப் பந்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்திய அணி. வெற்றி பெற்றுவிடும் என்று நினைத்திருந்த நிலையில், கடைசி 2 ஓவர்களில் 45 ரன்களை வாரி வழங்கி தோல்வியைச் சந்தித்திருக்கிறது இந்தியா.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழந்து 222 ரன்கள் குவித்தது. நிலைத்து நின்று 20 ஓவர்களும் ஆடிய ஓப்பனர் ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 123 ரன்கள் விளாசினார். 13 ஃபோர்களும், 7 சிக்ஸர்களும் அடித்து அமர்க்களப்படுத்தினார் அவர். பெரிய ஸ்கோரை சேஸ் செய்த ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை நன்றாகவே தொடங்கியது. ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட் பார்ட்னர்ஷிப் முதல் விக்கெட்டுக்கு 4.2 ஓவர்களிலேயே 47 ரன்கள் விளாசியது. ஆனால் அதன்பிறகு சில ஓவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா. 6.2 ஓவர்களில் 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் அதன்பிறகு களமிறங்கிய மேக்ஸ்வெல் அடித்து ஆடினார். மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் அவர் தன் அதிரடியை நிறுத்தவில்லை. அந்த அணி ஐந்தாவது விக்கெட்டை இழந்தபோது, அந்த அணி 39 பந்துகளில் 91 ரன்கள் தேவை என்று மிகவும் கடினமான நிலையில் இருந்தது. ஆனால் அதிலிருந்து வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார்கள்.

இதற்குக் காரணமாக அதிரடியாக சதமடித்து அசத்திய மேக்ஸ்வெல்லை கூறலாம். 48 பந்துகளில் 104 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆனால் அதேசமயம் இந்திய அணி செய்யத் தவறிய விஷயங்களையும் பேசவேண்டியுள்ளது.

இந்தப் போட்டியில் ரவி பிஷ்னாய் தவிர்த்து அனைத்து பௌலர்களுமே ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். அதிலும் குறிப்பாக பிரசித் கிருஷ்ணா நான்கே ஓவர்களில் 68 ரன்கள் அள்ளிக் கொடுத்தார். ஒவ்வொரு போட்டியிலும் ஓரிரு பௌலர்கள் ரன் கொடுப்பார்கள். அது எல்லோருக்குமே நடப்பது தான். ஆனால் கேப்டன்கள் பிளான் பி வைத்திருக்கிறார்களா என்பது தான் அந்தப் போட்டியின் போக்கை மாற்றும்.

இந்தத் தொடரில் இதுவரை நடந்திருக்கும் 3 போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் முறையே 208, 191, 225. ஒட்டுமொத்தமாக அவர்களின் ரன்ரேட் பத்துக்கும் மேல் தான் இருக்கிறது. அனைத்து ஆடுகளங்களுமே பேட்டிங்குக்கு சாதகமாக இருந்திருக்கின்றன என்பது ஒருபக்கம் இருந்தாலும், அதை சரிசெய்ய இந்திய அணி என்ன செய்தது?

இந்த 3 போட்டிகளிலுமே இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 பௌலர்களைத் தான் பயன்படுத்தினார். ஆறாவது பௌலிங் ஆப்ஷன் பற்றி அவர் யோசிக்கக்கூட இல்லை. ஆஃப் ஸ்பின் வீசக்கூடிய திலக் வர்மாவை மிடில் ஓவர்களில் எங்காவது பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. யஷஷ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷன் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் என வேறு யாருமே பந்துவீசப்போவதில்லை. அக்‌ஷர் படேல் ஒருவர் மட்டுமே அணியில் இருக்கும் ஆல்ரவுண்டர். ஸ்குவாடில் இருக்கும் இன்னொரு ஆல்ரவுண்டரான ஷிவம் தூபேவுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதனால் வேறு வழியே இல்லாமல், மோசமாக பந்துவீசும் பௌலரின் கோட்டாவையும் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இது இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் செய்த தவறு என்று மட்டும் சொல்லிவிட முடியாது. கடந்த சில ஆண்டுகளாக அனைத்து இந்திய அணி கேப்டன்களுமே இதைத்தான் செய்துவருகிறார்கள். 5 பௌலிங் ஆப்ஷன்களோடு மட்டுமே களமிறங்குகிறார்கள். ஏதாவது ஒருசில சமயங்களில் மட்டுமே ஆறாவது பௌலிங் ஆப்ஷன் அணியில் இருக்கும். அதுவும் அடிக்கடி காயம் ஏற்படும் ஹர்திக் பாண்டியாவாக இருக்கும். அவர் காயமடைந்துவிட்டால் பிறகு வழக்கம்போல 5 பௌலிங் ஆப்ஷன்கள் தான். பேட்ஸ்மேன்கள் யாரும் இப்போதெல்லாம் பந்துவீசுவதில்லை என்பதால் அது இந்தியாவை சில சமயம் இக்கட்டான சூழ்நிலைகளில் தள்ளுகிறது. இதை இந்திய அணி நிர்வாகம் எப்போது சரிசெய்யும் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com