முதல் கோப்பை to 2வது...to 3வது? கோப்பை கலாச்சாரம் உருவானது எப்படி? RCB-ன் சக்சஸ் ஃபார்முலா!
17 ஆண்டுகள் கோப்பை இல்லாமல் விமர்சனத்தில் தத்தளித்த ஆர்சிபி, இளம் வீரர்கள், அனுபவமற்ற கேப்டன், ஆண்டி பிளவர் உள்ளிட்ட பயிற்சியாளர் குழுவின் திட்டமிட்ட அணிக்கட்டமைப்பால் தொடர்ந்து 2வது ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றியது. ஒவ்வொரு வீரருக்கும் பேக்கப், 2வது அணியையும் உருவாக்கிய ஏலத் திட்டம், கூட்டுப்பணியை மையமாக்கிய கலாச்சாரம் ஆகியவை அவர்களின் புதிய சக்சஸ் ஃபார்முலாவாக மாறின.
‘வாழ்க்கை ஒரு வட்டம், இதுல ஜெயிக்கரவன் தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான்’ என்ற சினிமா வசனம் போல தான் ஐபிஎல்லில் ஆர்சிபியின் ஓட்டம் இருந்துள்ளது. 17 வருடங்களாக ஒரு கோப்பை கூட வெல்லமுடியாமல், பல வசைபாடல்களையும், விமர்சனங்களையும் சந்தித்த அணி மீண்டுவந்து ஒரு கோப்பை வென்றதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து 2வது கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.
சிக்ஸ் ஹிட்டிங் மெஷின்களான கிறிஸ் கெய்ல், ஏபிடி வில்லியர்ஸ் மட்டுமில்லாமல் ரன் மெஷினான விராட் கோலி என பல ஜாம்பவான்கள் இருந்தும் கூட கோப்பை வெல்லமுடியாத ஒரு அணி, தற்போது எப்படி இளம் வீரர்களை வைத்துக்கொண்டு, அனுபவம் இல்லாத கேப்டனை வைத்துக்கொண்டு கோப்பைகளை வெல்கிறது என்ற ஆச்சரியம் நிச்சயம் எல்லோருக்குமே உண்டு.
யார் காரணம் தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவரா? பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்கா? அல்லது பவுலிங் பயிற்சியாளர் ஓம்கார் சால்வியா.. எப்படி தோல்வியிலேயே துவண்டு போன அணி, மீண்டுவந்து கோப்பை வெல்லும் கலாச்சாரத்தை உருவாக்கி வைத்துவருகிறது.
ஆர்சிபியின் சக்சஸ் ஃபார்முலா..
நடப்பு ஐபிஎல் சீசனில் ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒவ்வொரு பேக்கப் வீரர்களை எடுத்து, கூடுதலாக 2வது அணியை கூட உருவாக்கும் வகையில் ஏலத்திலேயே அணியை கட்டமைத்தது ஆர்சிபி மட்டும் தான். இதை மற்ற அணிகள் அனைத்தும் ஏலத்தில் செய்ய தவறவிட்டன. உதாரணமாக அவர்களுடைய மேட்ச் வின்னிங் வீரர்களான ஃபிலிப் சால்ட், ஹசல்வுட், சுயாஷ் சர்மா போன்ற வீரர்களின் தேவையே இல்லாமல் ஆர்சிபி அணியால் நடப்பு சீசனில் வெற்றியை ருசிக்க முடிந்தது. 5 பவுலர்களை மட்டுமே வைத்தும் அவர்களால் போட்டியை வெல்ல முடிந்தது. ஒவ்வொரு போட்டியிலும் புதிய மேட்ச்வின்னிங் வீரர்கள் அவர்களுக்கு கைதூக்கினார்கள்.
ஸ்டார் வீரர்களை மட்டுமே வைத்துக்கொண்டு வெற்றிபெற முடியாது, ஒரு அணியாக சேர்ந்து தான் வெற்றியை பெறமுடியும் என்ற சரியான ரூட்டை ஆர்சிபி கையில் எடுத்துள்ளது. அதன் காரணமாகவே ஒரு வீரர் சொதப்பினாலும், அடுத்த வீரர் அணிக்காக வந்து நின்று போட்டியை வெல்லும் பாதையை உருவாக்குகிறார்.
அனைவரது முடிவையும் செவிசாய்க்கும் கேப்டன், வீரர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் பயிற்சியாளர்கள், தோள் கொடுக்கும் அனுபவம் வாய்ந்த வீரர்கள், கற்றுக்கொள்ளும் இளம் வீரர்கள் என ஒரு கூட்டு முயற்சியை கடந்த 2 வருடங்களாக ஆர்சிபி வெற்றிகரமாக செய்துவருகிறது.
2010-ல் சிஎஸ்கே, 2019-ல் மும்பை இந்தியன்ஸ் என 2 சாம்பியன் அணிகள் மட்டுமே தொடர்ச்சியாக 2 முறை ஐபிஎல் கோப்பை வென்ற நிலையில், ஆர்சிபி அணியும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. நீ ஏறி ஆடு கபிலா, இது ஆர்சிபியின் காலம்!

