25 ஆண்டுக்கு பின் இங்கிலாந்தை சம்பவம் செய்த WI! தொடரும் உலக சாம்பியனின் ஒருநாள் போட்டி சோகம்!

வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 25 ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்று அசத்தியுள்ளது.
Wi vs Eng
Wi vs Eng X
Published on

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. முதலில் தொடங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணியும், இரண்டாவது போட்டியை இங்கிலாந்து அணியும் வென்றிருந்த நிலையில், தொடரை உறுதிச்செய்யும் கடைசிபோட்டியானது நேற்று நடைபெற்றது.

25 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெற்றி!

3வது போட்டியில் இங்கிலாந்து அணி 40 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால், வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 188 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டக்கெட் 71 ரன்களும், லிவிங்ஸ்டன் 45 ரன்களும் சேர்த்தனர். வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய விண்டீஸ் 31.4 ஓவரிலேயே 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் அடித்து இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

Wi vs Eng
Wi vs Eng

தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்த போதிலும் டாப் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்ட ஆலிக் 45 ரன்கள் அடித்து நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தார். பின்னர் அவரை பின்தொடர்ந்த கார்டி 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால் இடையில் விக்கெட்டுகளை கைப்பற்றிய இங்கிலாந்து அணி அழுத்தம் போட்டது. கடைசி நேரத்தில் அதிரடியில் மிரட்டிய ஷெஃபர்ட் 28 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு 41 ரன்கள் அடிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவுசெய்து அசத்தியது.

நடந்து முடிந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு கூட தகுதிபெறாமல் ஏமாற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முன்னாள் ODI உலக சாம்பியன் அணிக்கு எதிராக ஒரு வரலாற்று வெற்றியை பதிவுசெய்து மீண்டும் பழைய விண்டேஜ் அணியாக திரும்பியுள்ளது. இந்த வரலாற்று வெற்றியை வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம் கொண்டாடி வருகிறது. அவர்கள் ஒரு வலுவான அணியாக சொந்த மண்ணில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கும் திரும்பவிருக்கின்றனர்.

உலகக்கோப்பைக்கு பின்னும் தொடரும் இங்கிலாந்தின் தோல்வி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என வென்றிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 1998ஆம் ஆண்டுக்கு பிறகு 25 வருடங்கள் கழித்து முதன்முறையாக சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள்தொடரை வென்று அசத்தியுள்ளது. அதேபோல கடந்த 16 வருடங்களாக இங்கிலாந்து அணியை ஒருநாள் தொடரில் வீழ்த்தாமல் இருந்துவந்த விண்டீஸ் அணி, ஒரு பெரிய தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து வருகிறது.

Buttler
Buttler

உலகக்கோப்பையை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் ஒருநாள் தோல்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஜோஸ் பட்லர் இந்த போட்டியிலும் டக் அவுட்டில் வெளியேறி, அவருடைய மோசமான ஃபார்மை தொடர்ந்து வருகிறார். இங்கிலாந்து அணி கடைசி 12 ஒருநாள் போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று 8 போட்டிகளில் தோல்வியை கண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com