உடைக்கப்பட்ட 149 ஆண்டுகள் சாதனை.. 401 ரன்கள் குவித்து உலகசாதனை படைத்த WI வீரர்கள்!
ஜங்கூ-சேஸ் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 401 ரன்கள் சேர்த்து, இதற்கு முன் எவரும் எட்டாத உலக சாதனையை படைத்தனர். 2016ல் இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ்-பேர்ஸ்டோ 399 ரன்கள் சேர்த்த சாதனையை தகர்த்த இந்த இணை, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் வரலாற்றில் 1958க்கு பின் 400 ரன்கள் கூட்டணியை பதிவு செய்த இரண்டாவது ஜோடியாக திகழ்கிறது.
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. நடந்துமுடிந்த தொடர்களில் ஒருநாள் தொடரை இலங்கை 1-0 என வென்ற நிலையில், டி20 தொடரை 2-1 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இந்நிலையில் 2 அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 25ஆம் தேதிமுதல் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 308 ரன்கள் அடித்த நிலையில், இரண்டாவதாக பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 626 ரன்கள் குவித்து டிக்ளார் செய்தது.
அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான அமீர் ஜங்கூ 233 ரன்களும், ரோஸ்டன் சேஸ் 194 ரன்களும் குவித்து அசத்தினர். இந்த 2 பேரும் 6வது விக்கெட்டுக்கு 401 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு புதிய உலகசாதனையை படைத்தனர்.
இதற்கு முன்பு 6வது விக்கெட்டுக்கு 400 ரன்கள் பார்ட்னர்ஷிப் அடிக்கப்பட்டதில்லை. 2016-ல் இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் ஜானி பேர்ஸ்டோ இருவரும் 6வது விக்கெட்டுக்கு அடித்த 399 ரன்களே சாதனையாக இருந்த நிலையில், அந்த சாதனையை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் உடைத்துள்ளனர்.
அதேபோல வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 1958ஆம் ஆண்டுக்கு பிறகு 2வது முறையாக 400 ரன்கள் பார்ட்னர்ஷிப் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களால் அடிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த போட்டியில் மொத்தமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்திய மூத்த வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கேமர் ரோச் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்தார். இந்த மைல்ஸ்டோனை கடக்கும் 5வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் இவராவார்.
இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கையை 101 ரன்களுக்கு சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி 217 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது.

