"சுப்மன் கில் இன்னும் முழுமை பெறவில்லை” - கேப்டன்ஷிப் குறித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் விமர்சனம்!
”சுப்மன் கில் இன்னும் கேப்டன் ஆக முழுமை பெறவில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இயன் பிஷப் விமர்சித்திருக்கிறார்.
இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக ரோஹித் சர்மா ஓய்வுபெற்ற பிறகு, டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பு 26 வயதான சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. வலதுகை பேட்டரான கில், இங்கிலாந்தில் நடந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 750 ரன்களுக்கு மேல் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரராக திரும்பியது மட்டுமல்லாமல், கேப்டனாகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தினார். இதன் விளைவாக இங்கிலாந்தில் 2-2 என்ற சமநிலை ஏற்பட்டது. தொடர்ந்து உள்நாட்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் சுப்மன் கில் வென்று கொடுத்துள்ளார். அதில் முதல் போட்டியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கொடுத்தார். இதனால், டெஸ்ட் அணியின் நம்பிக்கை கேப்டனாக சுப்மன் கில் மாறியுள்ளார். இதையடுத்து அவருக்கு வரவேற்பும், பாராட்டுகளும் கூடி வருகின்றன.
என்றாலும், அவர் மீதும் சில விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ”சுப்மன் கில் இன்னும் கேப்டன் ஆக முழுமை பெறவில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இயன் பிஷப் விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர், “கேப்டனாக இன்னும் கில் வளருவார். ஆனால் கில் இன்னும் முழுமை பெறவில்லை. கில்லுக்கு ஒரு அணியை டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்துவதற்கான பொறுமை இருக்கின்றது. ஆனால் ஒரு கேப்டனாக யுக்திகளை வகுப்பதில் குறைந்தபட்சம் இரண்டு சீசன்களாவது கற்றுக்கொள்ள வேண்டும். நிச்சயம் அதை கோலி மற்றும் ரோகித் ஆகியோர் அவருக்கு கற்றுக் கொடுப்பார்கள் என நான் நம்புகிறேன். அவர் கேப்டனாகவும் பேட்ஸ்மேன் ஆகவும் வளர கொஞ்சம் நேரமும், வாய்ப்பும் கொடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.