Aus Vs Wi Test: 85 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுக டெஸ்டில் சாதித்த இளம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

85 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அறிமுக வீரர் சமர் ஜோசப், சாதனை ஒன்றைச் சமன் செய்துள்ளார்.
சமர் ஜோசப்
சமர் ஜோசப்ட்விட்டர்

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி, அங்கு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, இவ்விரு அணிகளும் முதலில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளன. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் வெஸ்ட் இண்டீஸை பேட் செய்ய அழைத்தார்.

அந்த வகையில் ஃபார்ம் இன்றி தவிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 62.1 ஓவர்களில் 188 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அவ்வணியில் கிர்க் மெக்கின்சி மட்டும் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: NZ Vs PAK T20: பேட் இல்லாமல் ஓடிய முகமது ரிஸ்வான்.. 1 ரன் மட்டுமே கொடுத்த நடுவர்.. வைரல் வீடியோ!

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இதில் பாகிஸ்தான் தொடருடன் சமீபத்தில் ஓய்வுபெற்ற டேவிட் வார்னருக்குப் பதிலாக இந்தத் தொடரில் தொடக்க வரிசை வீரராக ஸ்டீவ் ஸ்மித் களமிறக்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸின் அறிமுக வீரர் சமர் ஜோசப் வீசிய 9-வது ஓவரின் முதல் பந்திலேயே அவர் 12 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். மறுபுறம் தன்னுடைய கேரியரின் முதல் பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித் போன்ற மகத்தான பேட்ஸ்மேனின் விக்கெட்டை எடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து உலகளவில் பேசுபொருளானார். இதன்மூலம் 85 ஆண்டுகால சாதனை சமன் செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு, 1939-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் டைலர் ஜான்சன் என்பவர்தான் தன்னுடைய முதல் பந்திலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். தற்போது சமர் ஜோசப், தாம் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்து அந்தச் சாதனையைச் சமன் செய்துள்ளார்.

மேலும் அவர், இந்தப் போட்டியில் கடைசி வீரராகக் களமிறங்கி 36 ரன்களையும் எடுத்திருந்தார். இதன்மூலம் ஒரேநாளில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். தொடர்ந்து அற்புதமான தொடக்கத்தைப் பெற்ற சமர் ஜோசப், அடுத்த சில ஓவர்களில் மற்றொரு நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஸ்ஷேனையும் 10 ரன்களில் அவுட்டாக்கினார். முதல் நாள் ஆட்ட முடிவின்படி ஆஸ்திரேலியா 59/2 என்ற நிலையில் உள்ளது. உஸ்மான் கவாஜா 30 ரன்களுடனும் கேமரூன் கிரீன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதையும் படிக்க: NZ Vs PAK T20: ஒரே போட்டியில் சாதித்த நியூசி. வீரர்... மோசமான சாதனை பட்டியலில் இணைந்த பாகி. பவுலர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com