"200+ இலக்கைக் கூட எங்களால் சேஸ் செய்ய முடியும்" - ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்

பந்துவீச்சுக்குப் பெயர்போன தங்கள் அணி தற்போது பேட்டிங்கிலும் நன்கு முன்னேறியிருக்கிறது என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான்.
ரஷித் கான்
ரஷித் கான்pt web

சி பிரிவில் இடம்பெற்றிருக்கும் அந்த அணி நியூசிலாந்து, உகாண்டா, பாபுவா நியூ கினியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளோடு மோதவிருக்கிறது. தங்கள் முதல் போட்டியில் அந்த அணி உகாண்டாவுக்கு எதிராக விளையாடுகிறது. இந்தத் தொடருக்கு முன்பு பேசிய ரஷீத் கான், தன் அணி 200+ டார்கெட்டையும் சேஸ் செய்யும் என்று கூறியிருக்கிறார்.

"முன்பு நாங்கள் பேட்டிங்கில் தடுமாறியிருக்கிறோம். அப்போதெல்லாம் எங்கள் பௌலர்கள் அதீத உழைப்பைக் கொடுத்து நாங்கள் வெற்றி பெறுவதற்கு உதவியிருக்கிறார்கள். ஆனால் இப்போது எங்கள் அணியில் நிறைய திறமையான இளம் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அதுவும் அண்டர் 19 அரங்கிலிருந்து வந்தவர்கள், மிகவும் இளம் வயதில், சீக்கிரமாக தேசிய அணி வாய்ப்பைப் பெற்றார்கள், கடினமாக உழைத்திருக்கிறார்கள், உலகின் அனைத்து மூலையிலும் சென்று விளையாடி மெருகேரிக்கொண்டே இருக்கிறார்கள்.

எந்த ஒரு ஆடுகளத்திலும் 200க்கும் அதிகமான டார்கெட்டை சேஸ் செய்ய முடியும் என்று கூறும் அளவுக்கான ஒரு பேட்டிங் யூனிட் எங்களுக்கு அமைந்திருக்கிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் முழு திறமையையும் வெளிப்படுத்தக்கூடிய திறமை எங்கள் அணிக்கு இருக்கிறது. டி20 கிரிக்கெட் முற்றிலும் மனநிலையைப் பொறுத்தது தான். சரியான மனநிலையும், வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கும்போது எதுவுமே சாத்தியம்.

அடுத்தது கிரிக்கெட். கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் போதுமான அளவு கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம் என்று நினைக்கிறேன். எங்கள் திறன் தொடர்ந்து முன்னேறியிருக்கிறது. எங்கள் எதிரணிகளுக்கு நாங்கள் நன்கு சவால் கொடுத்திருக்கிறோம்.

பலரும் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்று கூறுகிறார்கள். அதை நான் மிகவும் பாசிடிவான விஷயமாகப் பார்க்கிறேன். முன்பெல்லாம் நாங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இப்போது டாப் 4 அணிகளுக்குள் இருப்போம் என்று சொல்லும் வகையில் முன்னேறியிருப்பது எங்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய விஷயம்.

ஆனால் இதற்கெல்லாம் பெரிதாக கவனம் கொடுக்கப் போவதில்லை. மைதானத்தில் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம். கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் கிட்டத்தட்ட நாங்கள் அரையிறுதியைத் தொட்டிருந்தோம். நாங்கள் ஒரு போட்டியில் வென்றிருந்தாலும் அரையிறுதிக்கு முன்னேறியிருப்போம். அங்கு தான் எங்களால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது என்று நினைக்கிறேன். இந்த உலகக் கோப்பைக்காக நாங்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கோம். ஆனால், ஒவ்வொரு போட்டியாகத் தான் நாங்கள் கவனம் செலுத்தப்போகிறோம்.

இந்தத் தொடருக்கு நாங்கள் சிறப்பாக தயாராகியிருக்கிறோம் என்று நினைக்கிறேன். சில வாரங்களுக்கு முன்பு ஒரு உள்ளூர் டி20 தொடர் நடந்தது. அது ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக தயார் ஆவதற்கு உதவியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 2 வாரங்களுக்கு முன்பே நாங்கள் இங்கு வந்துவிட்டோம். அதனால் போதுமான அளவு நாங்கள் ஒரு அணியாக தயார் ஆகியிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சில வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த அனுபவம் இருக்கிறது. இருந்தாலும் ஐசிசி தொடர்களில் ஆட்டம் வேறு மாதிரியாக இருக்கும். ஆடுகளங்கள் எங்கு எப்போது எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. அதற்கு நீங்கள் சரியாக தயாராகவேண்டும். ஆடுகளம் இப்படித்தான் இருக்கும் என்று முன்கூட்டியே முடிவெடுத்து ஆடக்கூடாது" என்று கூறினார் ரஷீத் கான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com