”உலகக்கோப்பை ஆட வேண்டும் என்ற எங்களுடைய பசியே வெற்றிக்கு காரணம்!” - ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராஷா

வெஸ்ட் இண்டீஸை வென்று இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்ற எங்களுடைய பசி எங்களை வெல்ல வைத்துள்ளது என்று ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரரான சிக்கந்தர் ராஷா தெரிவித்துள்ளார்.
west indies- zimbabwe
west indies- zimbabweTwitter

2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரானது வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் மொத்தம் 10 அணிகள் மோத உள்ள இந்தத் தொடரில் “இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான்” முதலிய 8 அணிகள் தகுதிபெற்றுள்ளன. மீதமிருக்கும் 2 இடங்களுக்காக ‘இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, ஓமன், யு.ஏ.இ., அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் நேபாளம்’ முதலிய 10 அணிகளுக்கு இடையே உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்துவருகிறது.

ICC Cricket World Cup Qualifiers 2023
ICC Cricket World Cup Qualifiers 2023Twitter

விறுவிறுப்பாக நடந்துவரும் தகுதிச்சுற்று போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இரண்டும் நேற்று பலப்பரீட்சை நடத்தின. வென்றே ஆகவேண்டிய முக்கியமான போட்டியில் விளையாடிய ஜிம்பாப்வே அணியின் பேட்டர்கள் சிறப்பாகவே பேட்டிங் செய்தனர். ஆனால் இறுதியில் அற்புதமாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் ஜிம்பாப்வேவை 268 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கினர்.

west indies- zimbabwe
west indies- zimbabweTwitter

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாகவே வெற்றிபெற்றுவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள், ஜிம்பாப்வேவை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். முடிவில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது ஜிம்பாப்வே அணி. சிறப்பாக விளையாடிய சிக்கந்தர் ராஷா 68 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

உலகக்கோப்பை ஆட வேண்டும் என்ற எங்களுடைய பசியே வெற்றிக்கு காரணம்! - சிக்கந்தர் ராஷா

போட்டி முடிந்த பிறகு பேசியிருக்கும் சிக்கந்தர் ராஷா, “நான் வீரர்களிடம் கேட்டதெல்லாம் கடைசிவரை போட்டியை விட்டுக்கொடுக்காமல் தைரியமாக விளையாட வேண்டும். நாம் அதை களத்தில் நிரூபித்துக்காட்டினாலே போதும், நமக்குள் இருக்கும் திறனே நம்மை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் என்று தான். உலகின் சிறந்தவற்றிலிருந்து நாங்கள் வெகு தொலைவில் இல்லை. இந்த போட்டியில் வென்று உலகக்கோப்பை விளையாட இந்தியாவிற்கு செல்லவேண்டும் என்ற எங்களுடைய பசியே இந்த வெற்றிக்கு காரணம்.

உண்மையில் நாங்கள் 20-30 ரன்கள் குறைவாக இருந்தோம். ஆனால் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. நாங்கள் ஒருபோதும் அவர்களை சந்தேகிக்கவில்லை. எழுந்து நிற்க சிறந்த இடம் இதைத்தவிர வேறொன்றுமில்லை என்று எங்களுக்கு புரிந்தது. எங்களது பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினர். அவர்களால் மட்டும் தான் இந்த வெற்றி சாத்தியமானது” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com