வீடியோ: பேட்டிங்கின்போது சிறுபிள்ளைத்தனமாக சேட்டை செய்த லூயிஸ் கிம்பர்! வீணாக பறிபோன விக்கெட்

கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் லூயிஸ் கிம்பர், தனது விக்கெட்டை தானே எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
louis kimber leicestershire
louis kimber leicestershireTwitter

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இணைந்து நடத்தும் முதல்தர கிரிக்கெட் போட்டியான கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தற்போது நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், மொத்தம் 18 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில், அவ்வப்போது சாதனைகளுடன் சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தப் போட்டியில் லைசெஸ்டர்ஷைர் (Leicestershire) அணி வீரரான லூயிஸ் கிம்பர் களத்தில் செய்த விஷயம் வைரலாகி வருகிறது.

louis kimber leicestershire
louis kimber leicestershire

அந்தவகையில், கிளெவுசெஸ்டெர்ஷைர் (Gloucestershire) மற்றும் லைசெஸ்டர்ஷைர் (Leicestershire) அணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதின. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் கிளெவுசெஸ்டெர்ஷைர் அணி 368 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதை தொடர்ந்து லைசெஸ்டர்ஷைர் அணி தனது இன்னிங்சை துவங்கியது. அப்போது அந்த அணியின் நடுத்தர பேட்ஸ்மேனான 26 வயது லூயிஸ் கிம்பர் 65 பந்துகளை சந்தித்து 34 ரன்களை எடுத்திருந்தார். அப்போது கிளெவுசெஸ்டெர்ஷைர் அணியின் ஆலிவர் பிரைஸ் வீசிய பந்தை அடிக்க முயற்சித்தபோது, ஸ்டம்பை நோக்கி செல்ல இருந்த பந்து லூயிஸ் கிம்பரிடமே பவுன்ஸ் பேக் ஆனது. அப்போது தான் ஒரு பேட்டர் என்பதை மறந்து, அந்தப் பந்தை தனது வலது கையால் பிடித்த நிலையில், அடுத்த நொடியே அந்தப் பந்தை தட்டுதடுமாறி கீழே விட்டுவிட்டார். எனினும், கிளெவுசெஸ்டெர்ஷைர் அணி, பேட்ஸ்மேன் வேண்டுமென்றே பீல்டிங்கைத் தடுக்கவோ அல்லது திசைதிருப்பவோ வார்த்தை அல்லது செயலால் முயற்சித்தால் அவுட் கொடுக்கப்படலாம் (obstructing the field) என்ற அடிப்படையில் அவுட் கோரி முறையீடு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து களத்தில் இருந்த நடுவர்களான கிரஹாம் லாய்டு மற்றும் பால் பேல்ட்விட் சிறிது நேர விவாதத்திற்குப் பின்னர், லூயில் கிம்பருக்கு அவுட் கொடுத்தனர். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் விளையாட்டுத் தனமாக செய்வது போன்று லூயிஸ் கிம்பர் செய்ததை அடுத்து நெட்டிசன்கள் இருவேறு விதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com