ஜடேஜா, சிராஜை விட மற்றவர்கள் சிறந்தவர்களா..? Drop செய்ததை கடுமையாக சாடிய முன்னாள் வீரர்!
நியூசிலாந்து அணியின் இடது கை பேட்ஸ்மேன்களை எதிர்கொள்வதற்காக ஜடேஜாவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்தது சரியான முடிவாக இருக்கலாம். ஆனால், சிராஜை அணியில் சேர்க்காதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
WTC பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்திலும், இந்தியா 4வது இடத்திலும் நீடிப்பதால், இரண்டு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் எண்ணத்தில் களம்கண்டுள்ளது இந்திய அணி.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் தொடங்கிய நிலையில், இந்திய அணி முதலில் பந்துவீசியது. முதல் ஓவரிலேயே நியூசிலாந்து கேப்டன் டாம் லாதமை ஒரு அற்புதமான பந்தின் மூலம் போல்டாக்கி 0 ரன்னில் அனுப்பினார் பும்ரா. அடுத்த ஓவரிலேயே அன்ஷூல் கம்போஜ் டெவான் கான்வேவை அவுட்டாக்க, அடுத்தடுத்து டேரில் மிட்செல், பிளண்டல் இருவரையும் பும்ரா வெளியேற்றி அசத்தினார்.
70 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறிய நிலையில், விரைவில் இந்தியா ஆல்அவுட் செய்துவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 6வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் க்ளென் பிலிப்ஸ் இருவரும் 173 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டெடுத்து வந்துள்ளனர். இவர்களை இன்னும் பிரிக்க முடியாமல் இந்தியா தடுமாறி வருகிறது.
இந்நிலையில் தான் இந்திய அணியின் ஆடும் லெவனில் ஏன் ஜடேஜாவையும், சிராஜையும் எடுக்கவில்லை என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர். ஜடேஜாவை விட வாஷிங்டன் சுந்தர் பெரிய வீரரா?, சிராஜை விட அன்ஷூல் கம்போஜ் பெரிய பவுலரா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவரும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபரும் அதே கேள்வியை எழுப்பியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “நியூசிலாந்தின் இடது கை பேட்ஸ்மேன்களைக் கருத்தில் கொண்டு, ஜடேஜாவுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், சிராஜ் அணியில் சேர்க்கப்படாதது முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது. தனி ஒருவராக இங்கிலாந்து தொடரை சமன் செய்தவரும், WTC தொடரில் இந்தியாவின் முன்னணி விக்கெட் வீழ்த்தியவருமான அவருக்கு, சாதகமான சூழ்நிலைகளில்கூட இடம் கிடைக்கவில்லையா? முதல் நாளிலேயே இந்தியா அவரை இழந்து தவிக்கிறது. பார்ட்னர்ஷிப்களை உருவாக்குவது, பேட்ஸ்மேன்களை சோர்வடையச் செய்வது, தனது அயராத உழைப்பால் காரியங்களைச் சாதிப்பது என இது சிராஜின் களம். இந்தியாவின் இந்தமுடிவை ஜீரணிப்பது கடினமாக உள்ளது!” என பதிவிட்டுள்ளார்.

