”வைபவ் சூர்யவன்ஷியின் பில்டப்பைப் பார்த்து..” கடுமையாக விமர்சித்த வாசிம் ஜாபர்!
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியில், 15 வயதே ஆன அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் இடம்பிடித்திருந்தார். எனினும் அயர்லாந்து தொடரில் அவர் களமிறக்கப்படவில்லை. தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான தொடக்கப் போட்டியிலும் அவர் களமிறக்கப்படவில்லை. இதையடுத்து கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் பிசிசிஐயை கடுமையாக விமர்சித்தனர்.
இதற்கிடையே அணியில் இடம்பெற்றிருந்த மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொதப்பிய நிலையில் அவர் ஓரங்கப்பட்டு, 2ஆவது போட்டி முதல் வைபவ் களமிறக்கப்பட்டார். அவரும் 3 போட்டிகளில் சொதப்பியதால் கடைசிப் போட்டியில் கழற்றிவிடப்பட்டார். இதனால், அவர்மீது விமர்சனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், "அணி நிர்வாகம் வைபவ் சூர்யவன்ஷியை மிக அவசரமாக அறிமுகம் செய்துவிட்டது என்று நினைக்கிறேன். அவரைப் பற்றிய ஊடக விளம்பரங்களும், பில்டப்புகளும், அவர் விளையாட்டைப் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் உணர்ச்சிவசப்பட்ட எதிர்பார்ப்புகளுமே இதற்கு காரணம்.
நான் ஏற்கெனவே கூறியதுபோல, சஞ்சு சாம்சனைத்தான் அணியில் தொடர்ந்து விளையாட வைத்திருந்திருக்க வேண்டும். வைபவ் இன்னும் இளமையாக இருப்பதால், அவர் அணியுடன் பயணித்து வெளியில் இருந்தே ஆட்டத்தை உன்னிப்பாகக் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்” என்றவர், ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு, வைபவுக்கு இடமளித்திருப்பதையும் அவர் விமர்சித்துள்ளார்.

