”இங்கிலாந்தை ஒரு அறைக்குள் பூட்டிவைத்துவிட்டால் பாக். தகுதிபெறலாம்”-அரையிறுதி குறித்து வாசிம் அக்ரம்

நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், இங்கிலாந்தை 287 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற வேண்டும் என்ற கடினமான நிலையில் உள்ளது.
வாசிம் அக்ரம் - பாகிஸ்தான் அணி
வாசிம் அக்ரம் - பாகிஸ்தான் அணிTwitter

நடப்பு 2023 உலகக்கோப்பையானது பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 4 லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் முதல் மூன்று அணிகளாக அரையிறுதிக்கு முன்னேறி தங்களுடைய இடத்தை சீல் செய்துள்ளன.

ஒரு அரையிறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கும் நிலையில், மற்றொரு அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியோடு மோதப்போகும் அணி நியூசிலாந்தா? இல்லை பாகிஸ்தானா? என்ற குழப்பம் மட்டும் நீடித்துக்கொண்டே இருக்கிறது.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

அரையிறுதியின் 4வது இடத்துக்கான போட்டியானது நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மூன்று அணிகளுக்கு இடையே பலத்த போட்டியாக இருந்துவந்தது. ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு இருந்த பெரிய வாய்ப்பை தனியொரு ஆளாக க்ளென் மேக்ஸ்வெல் தட்டிப்பறித்துவிட்ட நிலையில், அரையிறுதிக்கு முன்னேறும் 4வது அணி நியூசிலாந்தா? அல்லது பாகிஸ்தானா? என்ற பரபரப்பான சூழல் எட்டியுள்ளது.

நியூசிலாந்து
நியூசிலாந்து

இந்நிலையில் நேற்று நடந்த முக்கியமான போட்டியில் இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, பாகிஸ்தானின் அரையிறுதி கனவில் பெரிய கல்லை எறிந்துள்ளது.

பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வழிகள் என்ன?

இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் மூலம் வீழ்த்தியதையடுத்து புள்ளிப்பட்டியலில் +0.743 என்ற நல்ல ரன்ரேட்டுடன் 4வது இடத்தை பிடித்துள்ளது நியூசிலாந்து அணி. இதன்மூலம் நியூசிலாந்தை விட அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் 5வது இடத்தில் பின் தங்கியிருக்கும் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை பின்னுக்குதள்ளி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

பாகிஸ்தான் தகுதிபெற இருக்கும் வழிகள்..

*இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய வேண்டும்.

* முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் குவித்தால் இங்கிலாந்தை 13 ரன்னுக்குள் ஆல் அவுட் செய்ய வேண்டும்

* 400 ரன்கள் குவித்தால் இங்கிலாந்தை 112 ரன்னுக்குள் ஆட்டமிழக்கச்செய்ய வேண்டும்

* 500 ரன்கள் குவித்தால் இங்கிலாந்தை 211 ரன்னுக்குள் சுருட்ட வேண்டும்

* ஒட்டுமொத்தமாக 287 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும்

பாகிஸ்தான் தகுதிபெற இதை செய்தால் தான் முடியும்!- வாசிம் அக்ரம்

மிகக்கடினமான ஒரு வாய்ப்பை நோக்கி பாகிஸ்தான் விளையாடவிருக்கும் நிலையில், இந்த வாய்ப்பின் மூலம் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியுமா என்பது குறித்து பேசியிருக்கும் வாசிம் அக்ரம் ஒரு நகைச்சுவையான ஸ்டேட்மெண்ட்டை கொடுத்துள்ளார்.

நியூசிலாந்து- இலங்கை போட்டி முடிந்த பிறகு பேசியிருக்கும் வாசிம் அக்ரம், “இப்போதும் புள்ளிக்கணக்குகளின் அடிப்படையில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்களை குவிக்க வேண்டும். பின்னர் இங்கிலாந்து அணியை டிரெஸ்ஸிங் ரூமில் பூட்டிவைத்துவிட்டால், Timed Out மூலம் பாகிஸ்தான் எளிதாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும்” என மிகக்கடினமான ஒரு வாய்ப்பு குறித்து கமெடியாக பேசியுள்ளார் வாசிம் அக்ரம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com