விராட் கோலி - அனுஷ்கா சர்மா
விராட் கோலி - அனுஷ்கா சர்மாinsta

“யாரும் பார்க்காத உங்களுடைய கண்ணீர்..” – கோலி ஓய்வுக்கு உருக்கமான பதிவிட்ட மனைவி அனுஷ்கா!

இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக இருந்துவரும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Published on

டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திலிருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்திருப்பது பல உலக கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது. 36 வயதாகும் விராட் கோலி இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகாலம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியிருக்கலாம் என்பதே எல்லோருடைய ஆதங்கமாகவும் இருந்துவருகிறது.

விராட் கோலி இந்தியாவுக்காக மொத்தம் 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 46.85 சராசரியுடன் 9,230 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 30 சதங்கள் மற்றும் 7 இரட்டைச் சதங்களும் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 254 ஆகும்.

rohit - kohli
rohit - kohliweb

2024 டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்தபிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து கூட்டாக ஓய்வை அறிவித்திருந்த நிலையில், தற்போது அதேபோல், இருவரும் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்திருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலியின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் சச்சின் முதல் டாம் மூடி வரை பல முன்னாள் வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

உருக்கமாக பதிவிட்ட மனைவி அனுஷ்கா!

விராட் கோலி ஓய்வு பெற்றதற்கு பிறகு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் மனைவி அனுஷ்கா, ஒரு இதயப்பூர்வமான வாழ்த்தை பகிர்ந்துகொண்டார்.

அந்த பதிவில் பேசியிருக்கும் அவர், “உங்களின் சாதனைகள், மைல்கல்கள் குறித்துதான் எல்லோரும் பேசுவார்கள். ஆனால் நீங்கள் வெளியே காட்டிக்கொள்ளாத கண்ணீர், யாரும் பார்க்காத போராட்டங்கள், கிரிக்கெட் மீது நீங்கள் கொண்டுள்ள அளப்பரிய காதல் ஆகியவைதான் எப்போதும் எனது நினைவில் நிலைத்து நிற்கும்.

ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கு பிறகும், கூடுதல் அடக்கம், கூடுதல் கற்றலுடன் திரும்பி வந்தீர்கள்.. இந்தப் பயணத்தை அருகே இருந்து பார்த்தது எனக்கு கிடைத்த பெருமை.

நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை விரைவில் அறிவிப்பீர்கள் என்று நான் நினைத்தேன். நீங்கள் உங்கள் இதயத்தை பின்பற்றினீர்கள், ஒன்றை மட்டும்தான் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன், இந்த விடைபெறுதலின் ஒவ்வொரு துளியையும் நீங்கள் சம்பாதித்துவிட்டீர்கள்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஓய்வு குறித்து இதயப்பூர்வமாக தெரிவித்திருந்த விராட் கோலி, “டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது மிகவும் கடினமான முடிவாகும். டெஸ்ட் போட்டிகள்தான் என்னை செதுக்கியதுடன், வாழ்க்கைக்கு தேவையான பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளன. கடினமான முடிவாக இருந்தாலும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும். என்னுடைய டெஸ்ட் பயணத்தை மகிழ்ச்சியுடன் திரும்பி பார்க்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com