’கோலி ஐபிஎல் தொடரிலும் விளையாடாமல் இருக்கலாம்!’ சுனில் கவாஸ்கர் சொன்னது என்ன? ரசிகர்கள் அதிர்ச்சி!

”விராட் கோலி ஐபிஎல் தொடரிலும் விளையாடாமல் இருக்கலாம்” என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் சொல்லியிருப்பது அவரிடம் ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
virat kohli, sunil gavaskar
virat kohli, sunil gavaskartwitter

இங்கி. டெஸ்ட் தொடர்: விலகிய விராட் கோலி!

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியைத் (இங்கிலாந்து வெற்றி) தவிர்த்து, அடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரையும் வென்று சாதனை படைத்துள்ளது. இவ்விரு அணிகளுக்கான கடைசி டெஸ்ட் போட்டி, அடுத்த மாதம் 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

விராட் கோலி
விராட் கோலிFile Image

இந்த நிலையில், இந்தியாவின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலியும், இந்தத் தொடரில் விளையாடுவார் எனத் தெரிவித்திருந்தார். எனினும், முதல் இரண்டு போட்டிகளில் தனிப்பட்ட காரணத்தை மேற்கோள்காட்டி இந்திய அணியில் இருந்து அவர் விலகினார். இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மாவிடம் விராட் கோலி தெரிவித்திருந்தார். பிசிசிஐயும் இதுகுறித்து முழு அறிக்கை வெளியிட்டு விராட் கோலிக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்திருந்தது. ’விராட்கோலிக்கு தனிப்பட்ட உரிமைக்கு மதிப்பளித்து, அதற்கான காரணங்களை யூகிக்க வேண்டாம்’ என ஊடகங்கள் மற்றும் ரசிகர்களை கேட்டுக்கொள்வதாகவும் பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

விராட் விலகல்: கருத்து தெரிவித்த டி.வில்லியர்ஸ்

இந்தச் சூழலில், விராட் கோலியின் விலகல் குறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் வீரரான ஏ.பி.டி.வில்லியர்ஸ், விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியினர் 2வது குழந்தையை வரவேற்க தயாராகி உள்ளனர். அதனால்தான் அவர் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டுள்ளார். இதன் காரணமாகவே அவர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்” எனத் தெரிவித்திருந்தது மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதற்கும் விராட் கோலி பதிலளிக்கவில்லை. இதையடுத்து, ’விராட் கோலி குறித்து தவறான தகவல் பகிர்ந்துவிட்டேன்’ என டி.வில்லியர்ஸ் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். இது ஒருபுறமிருக்க.. மறுபுறம், அவர் 3வது டெஸ்ட் போட்டிக்கு எப்படியும் திரும்பிவிடுவார் என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விராட் கோலி விலகியிருப்பதாக பிசிசிஐ அறிவித்தது.

விராட்டின் விடுப்பு குறித்து ஜெய் ஷா பதில்! 

கடந்த 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான விராட் கோலி, அதற்குப்பிறகான 13 வருட டெஸ்ட் கேரியரில் ஒருமுறைகூட முழு டெஸ்ட் தொடரிலிருந்தும் விலகியதில்லை. அவர் இல்லாமல் விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இதுதான்.

virat, jay shah
virat, jay shahpt web

இதுகுறித்து கருத்து தெரிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “கோலி எந்த காரணமும் இல்லாமல் விடுப்பு கேட்கும் வீரர் அல்ல. 15 வருடங்களில் இல்லாமல் தற்போது தனிப்பட்ட விடுப்பு கேட்டால், அப்படிக் கேட்பது அவரது தனிப்பட்ட உரிமை. நாங்கள் எங்கள் வீரர்களை நம்புகிறோம். அவரை பாதுகாக்க விரும்புகிறோம். விராட் பற்றி பின்னர் பேசலாம்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இருவரும், தங்களுடைய இரண்டாவது குழந்தையை வரவேற்றதாகவும், எல்லோருடைய ஆசீர்வாதம் மற்றும் வாழ்த்துக்களை விரும்புவதாகவும் பொதுவெளியில் தெரிவித்திருந்தனர். மேலும் அவர்கள், தங்களுக்கு கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்ததாகவும், அந்தக் குழந்தைக்கு அகாய் (AKAAY) எனப் பெயர் வைத்திருப்பதாகவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்திருந்தனர்.

’ஐபிஎல்லிலும் விளையாடாமல் போகலாம்’ - கவாஸ்கர்

இதையடுத்து, எல்லோரும் விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தையுடன் நேரத்தைச் செலவிட்டு வரும், விராட் கோலி அடுத்து இந்த வருட ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள இருக்கிறார். மார்ச் 22ஆம் தேதி நடைபெற இருக்கும் சென்னை அணிக்கு எதிராகக் களம் காண இருக்கிறார்.

இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாமல் இருந்த விராட் கோலி, ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள இருப்பதை அடுத்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார். "எந்த தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகினாரோ அதேபோல, ஐபிஎல் 2024 தொடரிலும் விராட் கோலி விலகலாம்” எனத் தெரிவித்துள்ளார். ராஞ்சியில் மாணவர்களுடனான கலந்துரையாடலில் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.

கவாஸ்கரின் இந்தக் கருத்து இந்திய அணிக்கான போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடாதது போல் ஐபிஎல் போன்ற விளையாட்டிலும் அதே காரணங்களுக்காக விளையாடாமல் இருக்கலாமே என்று சொல்வது போல் உள்ளதாக விராட் கோலி ரசிகர்களிடத்தில் கோபத்தை உண்டாக்கி உள்ளது. அதனால், ’உங்களுக்கும் இதுபோன்று ஒரு குடும்பச் சூழல் அமைந்திருந்தால் நீங்களும் அப்படித்தான் விலகியிருப்பீர்கள்’ என அவரது ரசிகர்கள் கவாஸ்கருக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

விராட் கோலி ரசிகர்கள் சிலர் கவாஸ்கர் கமெண்ட்ரி செய்வதில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com