முடிவுக்கு வந்த 13 ஆண்டுகால உறவு.. தமிழக அணியிலிருந்து விடைபெற்ற விஜய் சங்கர்!
தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாடி வந்த விஜய் சங்கர், இனி திரிபுரா அணிக்காக விளையாடவுள்ளார்.
தமிழ்நாடு அணியில் விளையாடி வந்த சீனியர் வீரரான விஜய சங்கர், அவ்வணிக்காக பல வெற்றிகளையும் தேடித் தந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடர்களில் விஜய் சங்கர் தமிழ்நாடு அணியின் தொடக்க பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. தவிர, தற்போது நடைபெறும் புச்சிபாபு தொடரிலும் அவர் ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து, அவர் தமிழ்நாடு அணியில் இருந்து வெளியேறி, திரிபுரா அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார்.
அவருடைய விருப்பத்திற்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் ஆட்சேபனையின்மை (என்.ஓ.சி) சான்றிதழ் அளித்துள்ளது. இதையடுத்து, அவர் விரைவில் திரிபுரா அணியுடன் இணையவுள்ளார். தமிழ்நாடு அணி தேர்வாளர்களிடமிருந்து தனக்கு பாதுகாப்பான உணர்வு கிடைக்காததே, தான் அணி மாற காரணம் என விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவருடைய தமிழ்நாடு உடனான 13 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.