உள்ளூர் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ரோகித், விராட், பண்ட்.. 1 ரன்னில் சாதனை படைக்கப்போகும் கோலி!
விஜய் ஹசாரே கோப்பையின் 33ஆவது சீசனில் இந்திய அணியின் கேப்டன்களும் மூத்த வீரர்களுமான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் மீண்டும் களத்திற்குத் திரும்பியுள்ளனர்.
இந்தியாவின் முதன்மையான உள்நாட்டு லிஸ்ட்-ஏ கிரிக்கெட் போட்டியான விஜய் ஹசாரே கோப்பையின் 33ஆவது சீசன் இன்று (டிச.24) அகமதாபாத்தில் தொடங்க இருக்கிறது. ஜனவரி 18ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடரில் மூத்த வீரர்களும் முன்னாள் கேப்டன்களுமான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இடம்பெற்றிருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், ஷர்துல் தாகூர் தலைமையிலான மும்பை அணியில் ரோகித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியில் விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டிற்குத் திரும்பியுள்ளார். கடைசியாக அவர் 2010இல் விளையாடிய நிலையில், டெல்லி அணிக்காக 17 போட்டிகளில் 60.66 என்ற சராசரியில் 910 ரன்கள் எடுத்தார். இதில் 4 சதங்கள் அடக்கம். அதிகபட்சமாக 124 ரன்கள் எடுத்தார். இது, அவருடைய உள்நாட்டுப் போட்டியில் வலுவான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகிய முன்னாள் விராட் கோலி, நியூசிலாந்திற்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடரில் இடம்பெறும் வகையில் தனது திறமையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர், இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளார். தவிர, இத்தொடரில் மேலும் ஒரு மைல்கல்லை அடைய இருக்கிறார். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அவர் 16,000 ரன்களை எட்ட இன்னும் ஒரேயொரு ரன் மட்டுமே எஞ்சியுள்ளது. இதுவரை அவர் 342 லிஸ்ட் ஏ போட்டிகளில் 57.34 என்ற சராசரியுட்ன் 15,999 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 57 சதங்களும், 84 அரைசதங்களும் அடக்கம்.
அதேபோல் ரோகித் சர்மாவும் இரண்டு போட்டிகளில் (சிக்கிம், உத்தரகாண்டுக்கு எதிராக) விளையாட உள்ளார். அதேபோல், மும்பை அணி சார்பில் ரோகித் சர்மாவும் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளார். 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக விஜய் ஹசாரேவுக்குத் திரும்பியிருக்கும் ரோகித் சர்மா, மும்பை அணிக்காக 18 ஆட்டங்களில் விளையாடி 600 ரன்களை அடித்துள்ளார்.
சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் மத்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து இந்திய வீரர்களும் கிடைக்கும்போது குறைந்தது இரண்டு விஜய் ஹசாரே டிராபி போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற பிசிசிஐயின் உத்தரவைப் பின்பற்றி விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இதில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தவிர, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனான ஷுப்மன் கில்லும் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ளார். இவர், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து நீக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

