மகன் கிரிக்கெட்டர்... ஆனாலும் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் ரின்கு சிங்கின் தந்தை!

இந்தியாவின் இளம் வீரரான ரின்கு சிங்கின் தந்தை கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Rinku Singh Father
Rinku Singh FatherX

இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரின்கு சிங், கடந்த 2023ம் ஆண்டு இந்தியாவிற்கான டி20 அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். டெத் ஓவர்கள் எனப்படும் கடைசி 5 ஓவர்களில் 200 ஸ்டிரைக்ரேட்டிற்கு மேல் வைத்திருக்கும் ரின்கு சிங், இந்திய அணிக்காக டி20 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியாவிற்காக 15 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் ரின்கு சிங், 89 சராசரி மற்றும் 176 ஸ்டிரைக் ரேட்டுடன் இரண்டு அரைசதங்கள் உட்பட 356 ரன்களை எடுத்துள்ளார். இதனையடுத்து தற்போது இந்தியாவிற்கான ஒருநாள் அணியில் இடம்பிடித்த ரின்கு, டெஸ்ட் அணியில் இந்தியா ஏ அணியில் இடம்பிடித்துள்ளார். விரைவில் இந்தியாவிற்கான டெஸ்ட் அறிமுகத்தையும் பெறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது.

Rinku Singh Parents
Rinku Singh Parents

இந்நிலையில்தான் மகன் ரின்கு சிங் ஒரு சிறந்த இந்திய கிரிக்கெட் வீரராக உருவெடுத்த போதும் கூட, தன்னுடைய தொழிலை விட்டுக்கொடுக்காத ரின்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங், உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் எல்பிஜி சிலிண்டர்களை டெலிவரி செய்யும் வேலையை தொடர்ந்து செய்துவருகிறார். அவர் சமீபத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. கிரிக்கெட்டில் வெற்றி பெற்றபோதும் கூட, தனது தந்தை தன்னுடைய வேலையை விட்டுவிட மறுத்துவிட்டதாக ரின்கு சிங் கூறியதற்கு பிறகு வீடியோ வெளிவந்துள்ளது.

என் தந்தை அவர் வேலையை விட்டுவிட மறுத்துவிட்டார்! - ரின்கு சிங்

தந்தை குறித்து முன்பு பேசியிருந்த ரின்கு சிங், “தற்போது என் தந்தையை வேலை செய்ய வேண்டாம் என கூறுமளவு எங்களின் நிலைமை மாறியுள்ளது. அதனால் சிலிண்டர்களை எடுத்துச் செல்லும் வேலையை விட்டுவிட்டு வீட்டில் ஓய்வெடுக்கும்படி நான் என் தந்தையிடன் கூறினேன். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். அந்த வேலையை அவர் தொடந்து செய்யவிரும்புகிறார். ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டே இருந்தால், அவராக ஓய்வை விரும்பும்வரை நாம் ஒருவரை தடுத்து நிறுத்த முடியாது” என்று ரின்கு சிங் கூறியிருந்தார்.

Rinku Singh
Rinku Singh

ரின்கு சிங் கூறியதையடுத்து தற்போது அவரின் தந்தை சிலிண்டர் டெலிவரி செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ரின்கு சிங் 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸால்55 லட்சத்திற்கு தக்கவைக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com