IND vs WI டெஸ்ட் : ஒற்றைக் கையால் சிக்ஸருக்குத் தூக்கி, அரைசதம் அடித்த இஷான் கிஷன்! #ViralVideo

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இஷான் கிஷன் ஒற்றைக் கையால் சிக்ஸருக்கு தூக்கி அரைசதம் அடித்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இஷான் கிஷன்
இஷான் கிஷன் ட்விட்டர்

வெஸ்ட் இண்டீஸுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இவ்விரு அணிகளுக்கிடையே 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. தொடர்ந்து, 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 24 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது 32 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற இன்னும் 289 ரன்கள் தேவை என்ற நிலையில், மழையினால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது.

இஷான் கிஷன்
இஷான் கிஷன்கோப்புப் படம்

இந்த நிலையில், 2வது இன்னிங்ஸில் ஒற்றைக் கையால் சிக்ஸர் அடித்து அரை சதம் இஷான் கிஷனின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

2வது இன்னிங்ஸில் 2 விக்கெட் விழுந்த நிலையில் சுப்மன் கில்லும், இஷான் கிஷனும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இஷான் 32 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தார். கெமர் ரோச் வீசிய ஓவரை எதிர்கொண்ட இஷான், சிக்ஸர் அடித்து அரைசதம் எடுத்தார். அத்துடன் அந்த சிக்ஸரை ஒற்றைக் கையால் அடித்ததுதான் தற்போது வைரலாகி வருகிறது.

சக வீரர் ரிஷப் பண்ட்டைப் போலவே அவரும் ஒற்றைக் கையால் சிக்ஸர் அடித்திருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் இஷான் கிஷன், ஆர்பி 17 என்ற எழுத்துக்கள் பொறித்த பேட்டை வைத்து விளையாடினார். இது ரிஷப் பண்ட் பெயரின் சுருக்கம் ஆகும்.

இதுகுறித்துப் பேசிய இஷான் கிஷான், “இந்தச் சுற்றுப்பயணத்திற்கு வருவதற்கு முன்பாக நான் என்சிஏவில் இருந்தேன். ரிஷப் பண்ட்டும் அங்கு பயிற்சியில் இருந்தார். நான் சிறப்பாக விளையாடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என அவர் எனக்குச் சில அறிவுரைகளைக் கூறினார். எங்கள் இருவருக்கும் யு19 போட்டிகளில் இருந்தே நல்ல நட்பு உள்ளது. நாங்கள் பல போட்டிகளில் ஒன்றாக விளையாடி உள்ளதால் எனக்கு அவர் உதவி செய்தார். அவருடன் சிறந்த உரையாடலை செய்வதற்கான நேரமாக அது அமைந்தது. நான் அவருக்கு இந்த நேரத்தில் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Rishabh
RishabhTwitter

34 பந்துகளைச் சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 52 ரன்கள் குவித்து அசத்திய இஷான், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது அரை சதத்தை பதிவு செய்தார். அதோடு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையையும் தகர்த்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டராக, அதிவேக அரைசதம் அடித்தவர் பட்டியலில் தோனி 2 ஆம் இடத்தில் இருந்து வந்தார். அவர், டெஸ்ட் போட்டியில் 34 பந்துகளில் அரைசதம் எடுத்திருந்தார். அதை, இஷான் 33 பந்துகளில் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் ரிஷப் பண்ட் முதல் இடத்தில் உள்ளார். அவர், 28 பந்துகளில் அரை சதம் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com